மந்தகதியில் மெட்ரோ ரயில் பணிகள்: பாதாளச் சாக்கடை குழாய்களை மாற்றியமைப்பதில் குளறுபடி: ஆறாக ஓடும் கழிவுநீர்

திருவொற்றியூர் பகுதியில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளில் பாதாளச் சாக்கடைக் குழாய்களை
மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியின்போது கழிவுநீர் குழாய் உடைந்ததால் சாலை முழுவதும் ஆறாக ஓடும் கழிவுநீர்.  (இடம்: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில்).
மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியின்போது கழிவுநீர் குழாய் உடைந்ததால் சாலை முழுவதும் ஆறாக ஓடும் கழிவுநீர்.  (இடம்: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில்).


திருவொற்றியூர் பகுதியில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளில் பாதாளச் சாக்கடைக் குழாய்களை மாற்றியமைப்பதில் ஏற்படும் குளறுபடியால், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடும் அவலம் நீடிக்கிறது.
வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. சுமார் 9 கி.மீ. நீளம் கொண்ட இத்திட்டத்தில் வண்ணாரப்பேட்டை-தண்டையார்பேட்டை இடையே சுமார் 2 கி.மீ. தூரம் பூமிக்கடியில் சுரங்கப் பாதையாகவும், தண்டையார்பேட்டை முதல் விம்கோ நகர் வரை சுமார் 7 கி.மீ. தூரம் உயர்மட்ட மேம்பாலத்திலும் செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் வரை ஒரு ஒப்பந்ததாரரும், எல்லையம்மன் கோயிலிலிருந்து விம்கோ நகர் வரை மற்றொரு ஒப்பந்ததாரரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் பாதை செல்வதற்கான பாலங்கள் தயாரிக்கும் பணி எண்ணூர் விரைவு சாலையில் தொலைத்தொடர்புத் துறைக்குச் சொந்தமான இடத்தில் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெறுவதால்
எங்கு திரும்பினாலும் சாலைத் தடுப்புகளும், தூசு மண்டலமுமாகக் காட்சியளிக்கிறது.
மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் ஒப்பந்ததாரர்கள் முனைப்புக் காட்டாததால், பாதாளச் சாக்கடைத் திட்டக் குழாய்களை இடமாற்றம் செய்வதில் தொடர்ந்து குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. 
தெருக்களில் ஆறாக ஓடும் கழிவுநீர்: இப்பிரச்னை குறித்து வடசென்னை நல உரிமை கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி ஜி.வரதராஜன், திருவொற்றியூர் பகுதிக்கு மெட்ரோ ரயிலைப் போராடிப் பெற்றோம். ஆனால் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எல்லையம்மன் கோயில் அம்மா உணவகம் அருகே திங்கள்கிழமை பிரதான கழிவுநீர்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையெங்கும் கழிவுநீர் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. பெரியார் நகரிலும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. இதுகுறித்து மெட்ரோ வாட்டர், மெட்ரோ ரயில் நிர்வாகங்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
மெட்ரோ திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லை. இப்பகுதி முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தைச் சந்திக்கின்றனர் என்றார் வரதராஜன்.
கழிவுநீர் வெளியேறுவது யாரால்?: இப்பிரச்னை குறித்து கழிவுநீர் அகற்றல் வாரிய பகுதி பொறியாளர் விஜய பிரகாஷ் கூறியது:
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி முதல் அஜாக்ஸ் பேருந்து நிலையம் வரை 600-க்கும் மேற்பட்ட கழிவுநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய்களில் இணைக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
வரைபடம், விவரங்கள் அனைத்தும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான புதிய மாற்றுக் குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகே பழைய குழாய்களில் கழிவு நீரை வெளியேற்றுவது நிறுத்தப்பட வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் மெட்ரோ ரயில் பாதை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்கள் சில நேரங்களில் கவனக்குறைவாகச் செயல்படும்போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளிலும், தெருக்களிலும் வெளியேறுகிறது என்றார் பிரகாஷ்.
விரைவில் தீர்வு: மெட்ரோ ரயில் பாதைகள் அமைப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்து ஒப்பந்தத்தை பெற்றுள்ள சிம்ப்லெக்ஸ் நிறுவன பொறியாளர் மைக்கேல் மதன், வள்ளலார் நகர் முதல் விம்கோ நகர்வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பூமிக்கு அடியில்தான் மின்சாரம், கழிவுநீர், குடிநீர், தொலைத்தொடர்பு கம்பி வடங்கள் உள்ளிட்ட அனைத்தும் செல்கின்றன. இவை பாதிக்கப்படாமல் பணிகளை மேற்கொண்டு வருவது சவாலானது. புதிய கழிவுநீர்க் குழாய் அமைக்கும் பணி பெரும்பாலான இடங்களில் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் ஒருசில இடங்களில் மட்டும் கழிவு நீர் வெளியேறுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.
அடைப்புகளை நீக்குவது, தேங்கும் திடக்கழிவுகளை மெட்ரோ வாட்டர் நிறுவனம்தான் அகற்ற வேண்டும். தெருவிளக்குகள் அமைப்பதற்கான அனைத்து செலவினங்களும் மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. பழுதடைந்த சாலைகள் இன்னும் 10 நாள்களில் நிச்சயம் செப்பனிடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com