சீரழிவின் விளிம்பில் பக்கிங்ஹாம் கால்வாய்: சீரமைக்க ஆவன செய்யுமா அரசு?

கழிவு நீராலும், ஆக்கிரமித்து வரும் ஆகாயத் தாமரையாலும், கணக்கில்லாமல் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளாலும் சென்னை மாநகரின் முக்கிய
சீரழிவின் விளிம்பில் பக்கிங்ஹாம் கால்வாய்: சீரமைக்க ஆவன செய்யுமா அரசு?


கழிவு நீராலும், ஆக்கிரமித்து வரும் ஆகாயத் தாமரையாலும், கணக்கில்லாமல் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளாலும் சென்னை மாநகரின் முக்கிய நீர்வழிப்பாதையான பக்கிங்ஹாம் கால்வாய் சீரழிவின் விளிம்பில் உள்ளது.
சென்னை பெருநகரில் மதுரவாயல் முதல் நேப்பியர் பாலம் வரை சுமார் 17 கி.மீ. தூரத்துக்கு கூவம் ஆறும், மணப்பாக்கம் மிலிட்டரி பாலம் முதல் பட்டினப்பாக்கம் வரை சுமார் 25 கி.மீ. நீளத்துக்கு அடையாறும் முக்கிய நதிகளாக ஓடுகின்றன. அத்துடன் ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், வேளச்சேரி வீராங்கல் ஓடை, பள்ளிக்கரணை சதுப்பு நிலக் கால்வாய், மாதவரம் தணிகாசலம் கால்வாய், புழல் ஏரியின் உபரிநீர் கால்வாய் மற்றும் மணப்பாக்கம் ராமாபுரம் வடிகால்வாயும், கீழ்கட்டளை, ஆதம்பாக்கம், ஒட்டியம்பாக்கம், சிட்லபாக்கம், செம்பாக்கம் ஏரிகள் ஆகியவற்றின் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் சென்னை மாநகரின் நீர்வழிப் பாதைகளில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக உள்ளன. ஒரு காலத்தில் இந்த நீர்வழிப் பாதைகளில் மாசுபடாத நீர் ஓடியது. இத்தனை நீர்வழிப்பாதைகளிலும் இணைக்கும் வகையில் செயற்கையாக அமைக்கப்பட்ட முக்கிய நீர்வழிப்பாதைதான் பக்கிங்ஹாம் கால்வாய். 
காக்கிநாடா முதல் விழுப்புரம் வரை: சென்னை மாநகரின் கால்வாய்கள், ஓடைகள், ஆறுகளை எல்லாம் இணைத்துச் சமன்படுத்தி ஒரு கால்வாயை அமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மாநகரின் வெள்ளப்பெருக்கைத் தடுத்திட முடியும் என்ற கோணத்தில்தான் 1801-ஆம் ஆண்டில் முதல்கட்டமாக எண்ணூரிலிருந்து சென்னை வரை பக்கிங்ஹாம் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. பிறகு ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதிக்கும், தமிழகத்தின் விழுப்புரம் பகுதிக்கும் இக்கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று சென்னையில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் ஆறுகளும், ஏரிகளும் அன்றைக்கு பக்கிங்ஹாம் கால்வாயின் நீர்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தன.
1890-ஆம் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படகுகளில் வணிகப் பொருள்களை சுமந்து செல்லும் வகையில் சிறப்பு பெற்றிருந்த இக்கால்வாய், பின்னர் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளத்தாலும், வறட்சியாலும் கால்வாய் வழி வணிகம் படிப்படியாகத் தடைபட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகள், பாலங்கள், சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் போன்றவைகளால் நாளுக்கு நாள் பக்கிங்ஹாம் கால்வாயின் நீர்வழிப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 
ஆகாயத் தாமரை: மாநகரில் பல இடங்களில் கால்வாயின் அகலம் சுருங்கி இருந்தாலும், கொருக்குப்பேட்டை முதல் எண்ணூர் வரை சுமார் 15 கி.மீ. தூரத்துக்கு இக்கால்வாய் தற்போதும் உயிர்ப்புடன்தான் இருந்து வருகிறது. 
ஆனால், சமீபகாலமாக அரசு அதிகாரிகளின் பாராமுகத்தால் இக்கால்வாய் முற்றிலுமாக மாசடைந்து நீர்வழி அடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் இருபுறமும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் மணலி சாலையிலிருந்து எண்ணூர் முகத்துவாரம் வரையில் எங்கு பார்த்தாலும் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளது.
துர்நாற்றம்: முகத்துவாரத்திலிருந்து சத்தியமூர்த்தி நகர் வழியாக செல்லும் இக்கால்வாயில் கருப்பு நிறத்தில் எண்ணெய் கலந்த கழிவுநீர் ஓடுகிறது. அத்துடன் அதில் வீசும் துர்நாற்றம் சுற்றுப்பகுதி சுகாதாரத்தை சீர்கெட வைத்துள்ளது. 
இதற்கு காரணம் திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுநீர் அனைத்தும் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி இக்கால்வாயில் கலப்பதே என்கின்றனர் இப்பகுதியினர். 
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ரசாயன ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய்களும் இக்கால்வாயில்தான் கலக்கின்றன.
இக்கால்வாய் சென்னை மாநகர நீர்வழிப் போக்குவரத்தின் உயிர்நாடியாக இருந்தது என்பதை கருத்தில் கொண்டு, அரசு நிர்வாகம் இதனை உடனடியாக சீர்படுத்த வேண்டுமென இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com