யுனானி படிப்பில் மாணவிக்கு இடம் மறுக்கப்பட்ட விவகாரம்: மீண்டும் தேர்வை நடத்த உத்தரவு

யுனானி மருத்துவப் படிப்பில் சேர இடம் மறுக்கப்பட்ட மாணவிக்கு மீண்டும் தகுதித் தேர்வை நடத்துவது குறித்து பரிசீலிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யுனானி மருத்துவப் படிப்பில் சேர இடம் மறுக்கப்பட்ட மாணவிக்கு மீண்டும் தகுதித் தேர்வை நடத்துவது குறித்து பரிசீலிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பெளசியா என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "2018-19 ஆம் கல்வியாண்டில் யுனானி மருத்துவ படிப்பில் சேர அனைத்துத் தகுதியும் இருந்தது. ஆனால் எனக்கு இடம் வழங்கப்படவில்லை. எனவே, யுனானி மருத்துவப் படிப்பில் சேர இடம் அளிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹாஜா மொய்தீன், "மனுதாரர் 10 -ஆம் வகுப்பில் 429 மதிப்பெண்களும், பிளஸ் 2 தேர்வில் 1,101 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார். 
அரபு மொழியை முதன்மைப் பாடமாகவும், ஹிந்தி மற்றும் உருது மொழிகளை விருப்பப் பாடமாகவும் படித்து, யுனானி மருத்துவப் படிப்பில் சேர முழுத் தகுதியுடன் இருந்தும் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை' என வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஏ.குமார், "யுனானி மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்த 27 பேரில், 25 பேருக்கு தேர்வு நடத்தப்பட்டு இடங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 
மனுதாரர் உருது தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். எனவேதான் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை' என்றார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "மனுதாரர் சித்தா, ஆயுர்வேதா, யோகா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர தகுதியானவர். ஆனால் மனுதாரர் யுனானி மருத்துவ படிப்பில் சேர விரும்புவதால்,  வரும் நவம்பர் 19 -ஆம் தேதி உருது மொழிக்கான தகுதித் தேர்வை நடத்த வேண்டும். 
தேர்வில் அவர் தேர்ச்சி பெறும்பட்சத்தில் இந்த கல்வியாண்டில் யுனானி மருத்துவப் படிப்பில் மனுதாரருக்கு இடம் அளிப்பது தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் பரிசீலிக்க வேண்டும்' என  உத்தரவிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com