நக்கீரன் கோபால் விவகாரம்: விளக்கம் அளிக்க உத்தரவு

நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில், நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் இந்து ராமை பேச அனுமதித்தது குறித்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விளக்கம்


நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில், நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் இந்து ராமை பேச அனுமதித்தது குறித்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தமிழக ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிட்ட விவகாரத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை போலீஸார் கைது செய்து, எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நக்கீரன் கோபாலை விடுவித்து உத்தரவிட்டது. 
நீதிபதி கோபிநாத் முன் நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது ஊடகப் பிரதிநிதியாக பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆஜராகி வாதிட்டிருந்தார். இந்த நிலையில் நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையின்போது, வழக்குக்கு தொடர்பில்லாத மூன்றாவது நபரான பத்திரிகையாளர் இந்து ராமின் வாதங்கள் பதிவு செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நீதிமன்றங்களில் மூன்றாவது நபர்கள் வாதிடுவதை ஏற்க முடியாது. நீதிமன்றங்கள் சட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமே தவிர, பொதுமக்களின் கருத்தை தெரிவிக்கும் தளமாக மாற்றக்கூடாது என கருத்து தெரிவித்தார். 
மேலும் இந்த விவகாரத்தில் எந்த சட்டத்தின் அடிப்படையில் பத்திரிகையாளர் இந்து ராமை 13வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி பேச அனுமதித்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து இடைக்கால தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com