சோதனை மேல் சோதனை...!: தொடரும் புழல் சிறை வேதனைகள்

புழல் சிறையில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றாலும், அங்கு சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது கைதிகளிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது புழல் சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள்
சோதனை மேல் சோதனை...!: தொடரும் புழல் சிறை வேதனைகள்


புழல் சிறையில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றாலும், அங்கு சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது கைதிகளிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது புழல் சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்து கடந்த செப்டம்பர் 10}ஆம் தேதி தினமணி நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியான பின்னர், அங்கு 5 முறை நடைபெற்ற சோதனையில் 49 டி.வி.க்கள், 70 எப்.எம். ரேடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் மாநிலம் முழுவதும் 6 சிறை கண்காணிப்பாளர்களும், புழல் சிறையில் 17 காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். புழல் சிறையின் பாதுகாப்பை பலப்படுத்தவும், மேம்படுத்தவும் இ}லாக் என்ற புதிய பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவும்,  சிறை வளாகத்தில் புதிதாக 65 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தவும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் விளைவாக, புழல் சிறையில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக, சட்டவிரோதப் பொருள்கள் அனைத்தும் இன்னும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சிறைத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் புழல் சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்த தகவல்கள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன.

பார்வையாளர் பார்க்க கட்டணம்: கைதிகளை பொதுவழியில் தவிர்த்து சிறப்பு வழியில் காண்பதற்கு பார்வையாளர்களுக்கு சிறைத் துறை விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் புழல் சிறையில் இந்த விதிமுறைகளை,  சில அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என புகார் கூறப்படுகிறது. ஏனெனில் செல்வந்தர்களாக உள்ள கைதிகள்,  தங்களது குடும்பத்தினரையும்,  வழக்குரைஞர்களையும் தனியாகவே சந்திக்க விரும்புவதை, இத்தகைய அதிகாரிகள், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதாக கைதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடல்நலம் குன்றியோர், முதியோர் ஆகியோர் மட்டுமே கைதிகளைத் தனியாகப் பார்ப்பதற்கு அனுமதி இருக்கும் நிலையில், செல்வந்தர்களாக உள்ள கைதிகளுக்காக இந்த விதிமுறைகள் வளைக்கப்படுவதாக கைதிகள் கூறுகின்றனர். இதற்காக சில அதிகாரிகள், கைதிகளின் குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும்  பெரும் பணம் லஞ்சமாகப் பெறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனை சலுகைகள்: புழலில் விசாரணைக் கைதிகள் சிறைப் பகுதிக்கும்,  தண்டனைக் கைதிகள் சிறைப் பகுதிக்கும் தனித்தனியாக இரு மருத்துவமனைகள் உள்ளேயே செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளில் தலா 40 படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கே சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், சிறைக்குள் வழங்கப்படும் சலுகைகளைக் காட்டிலும், இங்கு சிகிச்சை பெறும் கைதிகளுக்கு அதிகமாக சலுகைகள் வழங்கப்படுகின்றன. முக்கியமாக இருப்பிடம் மிகவும் சுகாதாரத்துடன் இருப்பதோடு,  பால்,  சூப் உள்ளிட்ட சத்துமிக்க உணவும் வழங்கப்படுகிறது.

இதை அனுபவிக்க நினைக்கும் சில கைதிகள், சிறைத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் மூலம் தங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இங்கு உள்நோயாளிகளாகச் சேர்ந்து, சலுகைகளை அனுபவிக்கும் சம்பவங்களும் நடைபெறுவதாக கைதிகள் கூறுகின்றனர். இதற்கான சில சிறைத் துறை அதிகாரிகள், பெரிய அளவில் ஆதாயம் பெறுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில் எளிய கைதிகளுக்கு ஒரு அணுகுமுறையையும், செல்வாக்குமிக்க கைதிகளுக்கு மற்றொரு அணுகுமுறையையும் சிறைத் துறையினர் கையாள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தடுக்க முடியாத உணவு விற்பனை: சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றாலும், புழல் விசாரணைக் கைதிகள் சிறையில் பீடி,  சிகரெட், கஞ்சா, லைட்டர்,  போதைப் பாக்கு ஆகியவற்றின் விற்பனையும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. அதேபோல சட்டவிரோதமாக சில கைதிகள், பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு வகைகளைத் தயாரித்தும் விற்பனை செய்கின்றனராம். ஆனால் இவை சோதனையைக் காரணம் காட்டி, முன்பை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கைதிகள் தெரிவிக்கின்றனர். இந்த விற்பனை நடைபெறுவது தெரிந்தும், சில அதிகாரிகள் கண்டும் காணாததுபோல இருக்கின்றனராம்.

நல்ல உணவு கிடைக்குமா?:  சிறைக்குள் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்த செய்தி வெளியான பின்னர், கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விளைவாக கடந்த இரு வாரங்களில் இரு முறை தரமான உணவு வழங்கக் கோரி கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று புழல்சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் சட்டவிரோதச் செயல்கள் அதிகம் நடைபெறும் இடமாகக் கூறப்படும்,  உயர் பாதுகாப்புப் பிரிவில் இன்னும் சிறைத்துறை சோதனை நடத்தாமல் இருப்பது கைதிகளிடம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

வாடகைக்கு அறைகள்

சிறைகளில் ஒன்று அல்லது இரண்டு கைதிகள் தங்கக் கூடிய அறைகளைப் பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த அறைகளை ஒதுக்குவதற்கு சிறைத் துறையில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என கைதிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக புழலில் செல்வாக்குமிக்க ஒரு கைதிக்கு அறை ஒதுக்க ரூ.2 லட்சம் முதலில் முன் பணம் பெறப்படுவதாகவும், பின்னர் மாதம்தோறும் ரூ.40 ஆயிரம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகை, பிற மத்திய சிறைகளில் இருக்கும் தேவையைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது என்கின்றனர் கைதிகள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

சோதனை நடத்திய ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் சோதனை நடத்திய சிறைத் துறை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா ரகசிய உத்தரவின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சுப்பையா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை  புழல் சிறை  வளாகத்தில் உள்ள தண்டனை சிறைப் பகுதியில் கடந்த செப்டம்பர் 3}ஆம் தேதி திடீர் சோதனை நடத்தியது.

இச்சோதனையின் மூலம்தான், கள்ளநோட்டு, கள்ளத் துப்பாக்கி கைதிகளிடமிருந்து செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே இந்த சோதனையை நடத்திய ஆய்வாளர் சுப்பையாவுக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், புழல் சிறையில் உள்ள ஒரு கைதி, மதுரை கூலிப்படையிடம் இது தொடர்பாகப் பேசியிருப்பதாகவும் மாநில உளவுத்துறை, சிறைத் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக புழல் சிறையில் இரு கைதிகள் மீது சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேலும் இதன் விளைவாக சிறைத் துறையைச் சேர்ந்த  சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பீடி கட்டு ரூ.500 / பிரியாணி ரூ.700

புழல் சிறையில் சோதனை நடத்துவதற்கு முன்பு சட்ட விரோதமாக விற்கப்பட்ட பொருள்களின் விலையும், சோதனைக்கு பின்னர் அந்த பொருள்கள் விற்கப்படும் விலையும் பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது.

பொருள்கள்    வெளியில் விலை (ரூபாயில்)    சோதனைக்கு முன்பு (ரூபாயில்)   சோதனைக்கு பின்பு (ரூபாயில்)

ஒரு பீடி கட்டு    25    250      500
சிகரெட் பெட்டி    100    600    1,200
லைட்டர்     50    200    500
போதைப் பாக்கு    100    200    600
பாக்கெட்  கஞ்சா(20 கிராம்)     200    2,000    10,000
சிக்கன் பிரியாணி    150     350    700
மட்டன் குழம்பு    350    700    1,500
மட்டன் சுக்கா    300    600    1,200
சிக்கன் குழம்பு    200    400    900
சிக்கன் 65    200     500    1000
முட்டை பொடிமாஸ்    30    100    200
ஆம்லேட்    15     50    100
அவித்த முட்டை    10    20    40
இரண்டு சப்பாத்தி    50    150    300
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com