பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி: நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகளைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம்


நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகளைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சீதாராமன் தாக்கல் செய்த மனுவில், ஆங்கிலேயர்களால் கடந்த 1877-ஆம் ஆண்டு நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வன விலங்குகளையும், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுப்புறச்சூல்களைப் பாதுகாப்பதே இந்தச் சங்கத்தின் முக்கிய நோக்கமாகும். ஆனால், தற்போது இச்சங்கத்தில் பல்வேறு குற்றப் பின்னணி கொண்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இயற்கை மற்றும் வன விலங்குகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் சென்று விலங்குகளை வேட்டையாடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையென்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களது விருந்தினர்களுடன் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று கேளிக்கைகளில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகளைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com