இலக்கை தாண்டி கண்காணிப்பு கேமரா பொருத்தம்: காவல் ஆணையர் பெருமிதம்

இலக்கை தாண்டி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார்.

இலக்கை தாண்டி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார்.
 சென்னையில் குற்றங்களை குறைக்கும் வகையிலும், குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து கைது செய்யும் வகையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக மூன்றாவது கண் என்ற பெயரில் சென்னை போலீஸார் பொதுமக்கள், வியாபாரிகள், தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆகியோரிடம் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
 இதன் விளைவாக சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எழும்பூர் பகுதியில் பொருத்தப்பட்ட 1556 கேமராக்களின் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் கலந்து கொண்டு, கண்காணிப்பு கேமரா சேவையைத் தொடங்கி வைத்துப் பேசியது:-
 கண்காணிப்பு கேமரா உதவியால் பல்வேறு குற்ற வழக்குகள் துப்பு துலங்கியுள்ளன. சென்னையில் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா இருக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறோம்.
 ஆனால் எழும்பூர் காவல் சரகத்தில் எங்களது இலக்கை தாண்டி 35 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இதேபோல சென்னையில் பல்வேறு இடங்களில் இலக்கை தாண்டி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
 சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்பாக இருக்கின்ற உணர்வை இப்போது உறுதியுடன் பெற்றுள்ளனர். சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்பதே காவல்துறையின் வேண்டுகோள் என்றார் அவர்.
 இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன், துணை ஆணையர் எஸ்.செல்வநாகரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com