25 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் விவசாயிக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவு

விவசாயத்துக்காக மின் இணைப்புக் கோரி 25 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் விவசாயிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயத்துக்காக மின் இணைப்புக் கோரி 25 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் விவசாயிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலசுப்ரமணியன் தாக்கல் செய்த மனுவில், திருப்பூர் மாவட்டம் பொன்னாபுரத்தில் எனது புன்செய் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கிணற்றில் இருந்து தண்ணீரைக் கொண்டு நவீன முறையில் விவசாயம் செய்ய முடிவு செய்து, சுமார் 20 குதிரைத் திறன் கொண்ட மோட்டாருக்கு மின் இணைப்புக் கோரி கடந்த 1992-ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த தாராபுரம் செயற்பொறியாளர், 20 குதிரைத் திறன் கொண்ட மோட்டாருக்கு மின் இணைப்பு பெற பொதுப்பணித்துறையின் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என தெரிவித்தார்.
 இதனையடுத்து பொதுப்பணித்துறை, மற்றும் செயற்பொறியாளரிடம் தடையில்லாச் சான்று கோரி விண்ணப்பித்தேன். ஆனால் எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே, மின் இணைப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
 இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ஆற்றுப்படுகையில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் உள்ள கிணறுகளில் 10 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார்களுக்குக்கூட மின் இணைப்பு பெற பொதுப்பணித்துறையினரின் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என விதி உள்ளதாகத் தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், மனுதாரரின் கிணறு ஆற்றுப்படுகையில் இருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மின் இணைப்புக்காக மனுதாரர் 25 ஆண்டுகளாக ஒவ்வொரு துறையினரையும் சந்தித்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அரசு இலவச மின்சாரம், மானியத்தில் மின்சாரம் எனப் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. கிணற்றுக்கு மின் இணைப்புக் கோரி இத்தனை ஆண்டுக் காலம் காத்திருந்த மனுதாரருக்கு இது மிகப்பெரிய இழப்பு. எனவே, அதிகாரிகள் மனுதாரரின் விண்ணப்பத்தை இரண்டு மாத காலத்துக்குள் பரிசீலித்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் இதுபோன்ற காரணங்களுக்காக தடையில்லாச் சான்று கோரி வருபவர்களின் மனுக்களைப் பொதுப்பணித்துறை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறைச் செயலாளர் அறிவுறுத்த வேண்டும். இதே போன்று மின்சார வாரியத்தில் உள்ள செயற்பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்துறைச் செயலாளர் அறிவுறுத்த வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com