2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பாதை: பல்வேறு இடங்களில் மண் ஆய்வு தீவிரம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பாதைக்காக பல்வேறு இடங்களில் மண் ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாதவரம்-சோழிங்கநல்லூர், கோயம்பேடு-கலங்கரை


இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பாதைக்காக பல்வேறு இடங்களில் மண் ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாதவரம்-சோழிங்கநல்லூர், கோயம்பேடு-கலங்கரை விளக்கம், மாதவரம்-சிறுசேரி சிப்காட் மெட்ரோ ரயில் பாதைக்காக மண் ஆய்வு இரண்டு மாதம் வரை நடைபெறும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரயில் சேவை நடைபெறுகிறது. தினமும் 45,000 முதல் 55,000 பேர் வரை பயணம் செய்து வருகின்றனர். 
பயணிகள், பொதுமக்கள் மத்தியில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இரண்டாவது கட்டமாக ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மாதவரம்-சிறுசேரி வரை ரூ.80,000 கோடி செலவில் 107 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதில், மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், கோயம்பேடு-கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
முதல்கட்டமாக, இந்தப்பாதைகளில் மண் பரிசோதனை வெவ்வேறு குழுக்களால் தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மாதவரம்-சிறுசேரி சிப்காட் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக, மாதவரம், அயனாவரம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, அடையாறு, இந்திரா நகர் வழியாக சிறுசேரி சிப்காட் வரை இந்தப் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்தப்பாதைக்கான மண் ஆய்வு 10 குழுக்களால் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இப்போது, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, ஆயிரம்விளக்கு, ஒயிட்ஸ் சாலை பகுதிகளில் மண் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறியது: மாதவரம் - சோழிங்கநல்லூர், கோயம்பேடு - கலங்கரை விளக்கம், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சிறுசேரி சிப்காட் ஆகிய பாதைகளுக்காக பல்வேறு இடங்களில் மண் ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வு இரண்டு மாதம் நடைபெறும். ஒவ்வொரு 50 மீட்டர் இடைவெளியில் இந்த ஆய்வு நடைபெறும். மண்ணின் தரம், இந்த மண் பயன்பாட்டுக்கு உகந்ததா, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ஏற்ற இடமா என்று ஆய்வு செய்யப்படும் என்றனர் அவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com