கவனியுங்கள்!

நெஞ்சுக்கு நேர்மை-  ஆர்.நடராஜ் ஐபிஎஸ் - 5 தொகுதிகள்;  தொகுதி 1 - பக். 248 ; ரூ.200 ; தொகுதி 2 -  பக்.232 ; ரூ.190 ; தொகுதி 3  -  பக். 232 ; ரூ.190 ; தொகுதி 4 -  பக்.248 ; ரூ.200 ; தொகுதி 5-  பக். 208


நெஞ்சுக்கு நேர்மை-  ஆர்.நடராஜ் ஐபிஎஸ் - 5 தொகுதிகள்;  தொகுதி 1 - பக். 248 ; ரூ.200 ; தொகுதி 2 -  பக்.232 ; ரூ.190 ; தொகுதி 3  -  பக். 232 ; ரூ.190 ; தொகுதி 4 -  பக்.248 ; ரூ.200 ; தொகுதி 5-  பக். 208 ; ரூ.170 ; உமாசந்திரன் பிரசுரம், சென்னை. 

சமுதாயச் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை மேம்போக்காகச் சொல்லாமல், அந்தச் சிக்கல்களின் காரணங்களைக் கண்டறிந்து அதைத் தீர்க்கும் வழிமுறைகளை இந்நூலில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்  சொல்கின்றன. 

நூலாசிரியர் தான் சொல்லும் எந்தப் பொருளுக்கும் தேவையான புள்ளிவிவரங்களை நிறைய தொகுத்து வைத்துக் கொண்டுதான் இந்த நூலில் உள்ள கட்டுரைகளை எழுதியிருக்கிறார் என்பதை ஒவ்வொரு வாசகரும் உணரும் வகையில் பல கட்டுரைகள் ஆதாரப்பூர்வமான  தகவல் களஞ்சியங்களாக உள்ளன. 

மனித உரிமைகள், சாலை பாதுகாப்பு, கல்வி, இசை, காவல்துறை, மக்களாட்சி உள்ளிட்ட  பல்வேறு பொருள்களில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ள இந்நூலில் மேலோங்கியிருப்பது  எளிமை, தெளிவு, உண்மை ஆகியவையே. 

சுவடுகள் (திரை விமர்சனத் தொகுப்பு) - வெங்கடேஷ் சக்ரவர்த்தி; பக்.344; ரூ.325; பிரக்ஞை, சென்னை-17.

தமிழ் சினிமா ஆய்வாளர்களில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் பங்களிப்பு தனித்துவம் வாய்ந்தது. சினிமாவின் மூலமாக  தமிழ் சமூகத்தின் ஆழ்மனதையும், அதில் கனன்று கொண்டிருக்கும் சாதிய, வர்க்க மற்றும் ஆண்  மைய  அதிகாரத்தையும்  ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 

"டேவிட் லீனின் ரயான்ஸ் டாட்டரும் மண்வாசனை சினிமாவின் கமர்ஷியல் வடிவமும்'  என்ற கட்டுரை குறிப்பிடத்தக்கது.  90- களில் எழுச்சி பெற்ற வலதுசாரி தேசியவாதத்தைப் பிரதிபலிப்பதாக உள்ள திரைப்படங்களைப் பற்றியும் (எடுத்துக்காட்டு: மணிரத்னத்தின் திரைப்படங்கள்), தமிழ் சினிமாவில் சாதிய கதாநாயகர்களின் எழுச்சியை விவரிக்கும் கட்டுரைகளும், கதாநாயக பிம்ப வழிபாடு குறித்த கட்டுரைகளும், அரசியலுக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவு குறித்த கட்டுரைகளும் நூலாசிரியரின் சமூக அக்கறையையும்,  எதையும் அறிவுப்பூர்வமாக, விமர்சனக் கண்கொண்டு பார்க்கும்  பார்வையையும் பறைசாற்றுகின்றன. 

ஓவிய நுண்கலை - ஓவியக் கலை மாணவர்களுக்கான கையேடு - சீ.வி.வடிவேலு; பக்.128; ரூ.120; சந்தியா பதிப்பகம், சென்னை-83.

ஓவிய நுண்கலையின்  செயல் வடிவ அணுகுமுறைகளை விரிவாகவும் எளிய நடையிலும் தமிழில் அளித்திருப்பது சிறப்பு.  ஓவிய நுண்கலையை முழுமையாகக் கற்றிட விரும்புவோர்க்கும், அக்கலையைப் பயிலும் மாணவர்களுக்கும் இந்நூல் பெருமளவில்  உதவும் என்பதில் ஐயமில்லை. ஓவியம் பற்றிய நூல் என்பதால் நூல் முழுக்க ஓவியங்களை வைத்தே பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. 

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள் - ம.இராசேந்திரன்; ரூ.180; அடையாளம், புத்தாநத்தம்.

பழங்குடி மக்கள் யார்?  அவர்களின் வரலாறு என்ன?  சமுதாய மாற்றத்தில் அவர்கள் மட்டும் தனித்துவிடப்பட்டது எப்படி? அவர்களை இணைத்துக் கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகுமா?  குறும்பர்கள் யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கூறும் நூல். காலின் மெக்கன்சியின் சுவடிகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் பழங்குடி மக்களின் வாழ்க்கை, வரலாறு இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com