தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

தொகுதியில் மக்களின் நலனுக்காக நவீன தொழில்நுட்பத்தை எம்.பி.க்கள் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டார்.

தொகுதியில் மக்களின் நலனுக்காக நவீன தொழில்நுட்பத்தை எம்.பி.க்கள் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டார்.
பிரைம் பாயிண்ட் பவுண்டேசன், பிரசன்ஸ் இணையதள மாத இதழ் மற்றும் சன்சத் ரத்னா விருது குழு ஆகியவற்றின் சார்பில், 16-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான "நாடாளுமன்ற ரத்தினம் ' விருது வழங்கும் விழா சென்னை ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டார். 
நாடாளுமன்ற நிலைக்குழு (நிதி) தலைவர் எம்.வீரப்ப மொய்லி,  மாநிலங்களவை உறுப்பினர்கள் ரஜனி பாட்டீல், ஆனந்த் பாஸ்கர் ரபோலு, எம்.பி.க்கள் பர்த்ருஹாரி மஹ்தப், என்.கே.பிரேம சந்திரன், அனுராக் சிங் தாகூர், சுப்ரியா சுலே, நிஷிகாந்த் துபே, ராஜீவ் சங்கர்ராவ் சாத்தவ், ஸ்ரீரங் அப்பா பர்னே, தனஞ்செய் பீம்ராவ் மகாதிக், ஹீனா விஜயகுமார் காவித் ஆகியோருக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித் விருதுகளை வழங்கி பேசியது: 
மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எம்.பி.க்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொகுதிக்கு ஆடம்பர காரில் செல்ல வேண்டும் என்பது வேண்டியதில்லை.  நான் எம்.பி.யாக இருந்தபோது, சிறிய ரக மாருதி காரில் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தேன். எம்.பி.க்கள் எளிமையாக இருந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். நாடாளுமன்றத்தை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு எம்.பி.க்கள் முன்வர வேண்டும்.
அமெரிக்காவில் செனட் உறுப்பினர்கள் சொந்த பிரச்னைகளை பேசுவதில்லை. மாறாக அவர்கள் புதிய கொள்கைகளை உருவாக்குவதில் அக்கறை செலுத்துகிறார்கள்.  நமது நாட்டில் பல திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி எல்லாம் மக்கள் அறிந்திருப்பது இல்லை. ஆனால், இடையில் இருப்பவர்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். இது ஒழிக்கப்படவேண்டும். இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு.
அரசியல் தலையீடு இன்றி நட்புறவு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பிரச்னைகளை எளிதாக தீர்க்க முடியும். நாடாளுமன்ற அரங்கில் விவாதிக்கும்போது பல நல்ல விஷயங்கள் நடைபெறும். 
திட்டத்தின் பலன்கள் மக்களை சென்றடைவதற்கு எம்.பி.க்கள் பாடுபடவேண்டும். தொகுதியில் மக்களின் நலனுக்காக நவீன தொழில்நுட்பங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பயன்படுத்தவேண்டும். 
இன்றைய காலத்தில் சமூக ஊடகங்கள்  முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டில் நகரமக்கள், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அடைந்துள்ளது.  இதை மக்களின் நலனுக்காக எம்.பி.க்கள் பயன்படுத்த வேண்டும் என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
நிகழ்ச்சியில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசியது:ஜனநாயகம் தழைக்கவேண்டும் என்றால், தேவைக்கு ஏற்ப தேர்தல் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியமாகும். அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையில், தேர்தல் சீர்திருத்தம் குறித்து வலியுறுத்தவேண்டும். 
மகா கூட்டணி,  தேர்தல் சீரமைப்புக்காக பயன்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க எம்.பி.க்கள் பாடுபட வேண்டும்.  2019 பொதுத் தேர்தலை ஜனநாயக முறையில் சிறப்பாக நடத்த ஒத்துழைக்கவேண்டும் என்றார் அவர்.
 பிரைம் பாயிண்ட் பவுண்டேசன் தலைவர் கே.ஸ்ரீனிவாசன், சன்சத் ரத்னா விருது குழு தலைவர் பவனேஷ் தியோரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com