கூவத்தூர் அருகே பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டிப்பு

 கல்பாக்கம் அருகே கூவத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் புதன்கிழமை  பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது.
கூவத்தூர் அருகே பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டிப்பு


 கல்பாக்கம் அருகே கூவத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் புதன்கிழமை  பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது.    குழந்தையின் தாய் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கல்பாக்கம் கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன்,  மனைவி  பொம்மி . இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. பொம்மி கர்ப்பமானதை அடுத்து  மருத்துவர்களிடம் முறையான சிகிச்சை மற்றும் பரிசோதனை  மேற்கொண்டு வந்துள்ளார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை பொம்மிக்கு  வளைகாப்பு  நடைபெற்றுள்ளது.  
இந்நிலையில் பிரசவத்திற்காக புதன்கிழமை காலை 6 மணியளவில் கூவத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில்  அங்கிருந்த செவிலியர் பிரசவம் பார்த்துள்ளனர்.  
குழந்தையை  இடுக்கியை வைத்து எடுத்தபோது தலை மட்டும் தனியாக  வந்துள்ளது.  இதையடுத்து பொம்மி 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை  மூலம் அவரது வயிற்றில் இருந்து  குழந்தையின் உடல்  வெளியே எடுக்கப்பட்டது. 
குழந்தையின் கழுத்து துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 
பொம்மிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்கு முன்பாக கூவத்தூர் அரசு சுகாதார மையத்தை பொம்மியின் கணவர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் மேற்கொண்டனர். 
பின்னர் புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கூவத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரசவம் பார்த்த செவிலியர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
கூவத்தூர் போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில்,  தாயின் வயிற்றிலேயே இறந்த நிலையில் சிசு இரண்டு நாள்கள் இருந்துள்ளது. இதுவே தலை துண்டானதற்குக் காரணம். குழந்தையின் எடை 5.5 கிலோவாக  இருந்தது. 
கருவியைப் பயன்படுத்தி பிரசவம் பார்க்கப்பட்டபோதுதான் இது தெரிய வந்துள்ளது. குழந்தையின் தலையை உடலுடன் பொருத்த பிரேதப் பரிசோதனை செய்யப்படும். 
மேலும் குழந்தையின் தலை துண்டான விவகாரம் குறித்து விசாரணை நடத்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு தலைமை மருத்துவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று குழந்தைசாமி கூறியுள்ளார்.
விசாரணை நடைபெறுவதையொட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு அமைப்பு கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது குழந்தையின் தலை தனியாக துண்டானதாகக் கூறப்படும் விவகாரத்தில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை சுகாதாரத் துறை அமைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட இடத்துக்கு அந்தக் குழுவினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கூவத்தூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரசவ வலியில் அந்தப் பெண் வந்தபோதே, வயிற்றில் இருந்த குழந்தை இறந்திருப்பதாகத் தெரிகிறது. 
அந்தச் சூழலில், குழந்தையின் தலை மட்டும் வெளியே வந்ததாலும், அந்நேரத்தில் மருத்துவர்கள் எவரும் இல்லாததாலும் செவிலியர்களே குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். அவ்வாறு குழந்தையை எடுக்காவிட்டால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். 
அந்த நோக்கத்தில்தான் குழந்தையை வெளியில் எடுக்க செவிலியர்கள் முற்பட்டதாகத் தெரிகிறது. இதில் தலை தனியாக துண்டிக்கப்பட்
டிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட பெண் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் உடல் முழுமையாக வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டதையடுத்து தற்போது அப்பெண் நலமாக உள்ளார்.
இதனிடையே, சுகாதாரத் துறைச் செயலரின் உத்தரவின்பேரில், இந்தச் சம்பவத்தை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், தேசிய நல்வாழ்வு குழுமத்தைச் சேர்ந்த குமுதா, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் பழனி, கூடுதல் இயக்குநர் டாக்டர் தாமரைச் செல்வி, செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வர் டாக்டர் உஷா உள்பட 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அக்குழுவைச் சேர்ந்தவர்கள், கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், அரசு மருத்துவமனைக்கும் சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com