சென்னையில் களைகட்டிய வண்ணங்களின் திருவிழா: ஹோலி உற்சாகக் கொண்டாட்டம்

வசந்த காலத்தை வரவேற்கும், வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை சென்னையில் களை கட்டியது.  வட மாநிலத்தவர் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் ஹோலிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
சென்னை வேப்பேரி அகர்வால் நவ்யுக் சங்கம் சார்பில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டம்.
சென்னை வேப்பேரி அகர்வால் நவ்யுக் சங்கம் சார்பில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டம்.


வசந்த காலத்தை வரவேற்கும், வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை சென்னையில் களை கட்டியது.  வட மாநிலத்தவர் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் ஹோலிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
ஹோலி என்றால் வண்ணம், ஹோலி என்றால் உற்சாகம்.  வட மாநிலங்களில் மதுரா, வாராணசி போன்ற இடங்களில் ஹோலி கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. நாடு முழுவதும் வெகு விமரிசையாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  ஹோலிகா எனும் அரக்கி தீயில் அழிந்த புராணத்தை நினைவுகூரும் வகையிலும், வசந்த காலத்தை வரவேற்கும் வகையிலும் இந்தப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.   
வட மாநிலங்களில் புதன்கிழமையே ஹோலி கொண்டாட்டங்கள் தொடங்கி விட்ட நிலையில், வடமாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கும் சென்னை சௌகார்பேட்டை, யானைக்கவுனி, வேப்பேரி, புரசைவாக்கம் போன்ற இடங்களில் ஹோலி பண்டிகை வியாழக்கிழமை களை கட்டியது.  
முதியவர் முதல் சிறியவர் வரை ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வீசி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்தனர்.   
குறிப்பாக சௌகார்பேட்டையின் அனைத்து தெருக்களும் வண்ணமயமாக மாறின.  அங்குள்ள தெருக்களில் வந்து செல்லும் பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து அவர்களும் வண்ணப்பொடிகளைத் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டம், பாட்டம் என உற்சாகம் கரைபுரண்டோடியது. 
 மெரீனா கடற்கரையில் சில வடநாட்டு இளைஞர்கள் அங்கு வந்த தமிழக இளைஞர்கள் மீது வண்ணப் பொடிகளை பூசினர். வடநாட்டு பண்டிகையாக இருந்தாலும் தமிழக இளைஞர்களும் அவர்களுடன் இணைந்து வண்ணப் பொடிகளை பூசி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பின்னர், குழுவாக நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். 
 சிறுவன் மயக்கம்:  வேப்பேரி ஜோதி வெங்கடாச்சலம் தெருவில் உள்ள ஒரு இடத்தில் ஹோலி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது வண்ணப் பொடிகள் தூவப்பட்டதுடன், வண்ண நீரும், மின் மோட்டார் மூலம் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அப்போது தண்ணீர் தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்த நமன் என்ற சிறுவன் மயக்கம் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்த நபர்கள் அந்தச் சிறுவனுக்கு முதலுதவி அளித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து அந்த இடத்தில் மின் மோட்டாருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்கசிவால் மின்சாரம் பாய்ந்து சிறுவன் மயங்கினாரா அல்லது வலிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com