புயல் மழை: பூண்டி ஏரி நிலவரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பூண்டியின் ஷட்டர்கள் பாதுகாப்பாக உள்ளதா

திருவள்ளூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பூண்டியின் ஷட்டர்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்தும், நீர் வரத்துக் கால்வாய்களின் நிலவரம் குறித்தும் நாள்தோறும் கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக பூண்டி ஏரிப் பகுதியில் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.  
திருவள்ளூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சாரல் மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் குளம், குட்டைகளில் நீர் ஆதாரம் தேங்கி வரும் சூழ்நிலை உள்ளது. இதற்கிடையே புயல் மழையால் பூண்டி ஏரியின் நிலவரம் குறித்தும், ஷட்டர்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பது குறித்தும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கொட்டும் மழைக்கிடையே புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
சென்னை மாநகர பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது பூண்டி ஏரியாகும். அதனால் மழையால் குடிநீர் பணிகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. அந்த வகையில் நீரின் கால்வாய் மற்றும் ஷட்டர்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பது தொடர்பாக அவர் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து  கால்வாய்கள் உடைப்பு இல்லாமல் உள்ளனவா, அதனைக் கண்காணிக்க என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.       
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றாக விளங்குவது பூண்டி நீர்த் தேக்கமாகும். இந்த ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய்கள் வழியாக செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு நீர் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் புயல் மழை காரணமாக ஏரி நிலவரத்தைப் பாதுகாக்கும் வகையில் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 
பூண்டி ஏரியின் மதகுகள், நீர் கொள்ளவு, நீர் இருப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போதைய நிலையில் 358 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. எனவே புயல் மழையைத்  தொடர்ந்தும் பூண்டி ஏரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நல்ல நிலையில் உள்ளன. ஏற்கெனவே இங்குள்ள 16 மதகுகளில் 4 மதகுகள் ரூ.56 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன.   சென்னைக்கு குடிநீர்  செல்லும் கால்வாயை கண்காணிக்கும் பணியில் ஒரு ஷிப்டுக்கு 6 பேர் வீதம் நாள்தோறும் கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட உள்ளனர். இதைத் தொடர்ந்து செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  
அப்போது, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார வளத்துறை செயற்பொறியாளர் கெளரிசங்கர், துணை வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com