மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாநிலப் பேருந்துகள் முழு அளவில் இயக்கம்

சென்னை மாதவரம் அடுக்குமாடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் முழு அளவில் ஆந்திர மாநிலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று
மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாநிலப் பேருந்துகள் முழு அளவில் இயக்கம்


சென்னை மாதவரம் அடுக்குமாடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் முழு அளவில் ஆந்திர மாநிலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோயம்பேட்டில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாதவரத்தில் கீழ்தளம், மேல்தளத்துடன் கூடிய அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2011-ஆம் ஆண்டு அறிவித்தார்.
இதையடுத்து இப்பேருந்து நிலையம் அமைப்பதற்காக மாதவரம் ரவுண்டானா அருகே 8 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தை அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பு பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கி கடந்த 10-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 
இப்புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக விசாலமான அறைகள், ஹோட்டல்கள், வணிக வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை போன்றவை நவீன முறையில் கட்டப்பட்டுள்ளன. மேலும் கார்கள், மோட்டார் சைக்கிள்களை தனித்தனியே நிறுத்துவதற்கான வாகனங்கள் நிறுத்துமிடம்,
இலவச குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி கார் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சமூக விரோதிகள், திருடர்கள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறை போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர், விஜயவாடா என ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்குப் பேருந்துகள் வெள்ளிக்கிழமைமுதல் முழு அளவில் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து கோயம்பேடு, பாரிமுனை போன்ற பகுதிகளுக்கும் மாநகர் பேருந்துகள் இணைப்புப் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது மாதவரம் புதிய அடுக்கு மாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரம் மற்றும் தமிழக அரசுப் பேருந்துகள் ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறினர்.
அந்த அதிகாரிகள் மேலும் கூறியது: நாளொன்றுக்கு தமிழக அரசுப் பேருந்துகள் 238, ஆந்திர அரசுப் பேருந்துகள் 205, தனியார் பேருந்துகள் 25 என மொத்தம் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் திருப்பதி, காளஹஸ்தி, திருவள்ளூர், சித்தூர், நெல்லூர், நகரி, நாயுடுபேட்டை, சத்தியவேடு, ஊத்துக்கோட்டை, சுண்ணாம்புக்குளம், பெரியபாளையம் போன்ற பகுதிகளுக்கு குறைந்தது 10 நிமிடம் முதல் அதிகபட்சமாக 15 நிமிடத்துக்குள் பேருந்துகள் இயக்கப்படும்.
இதில் திருப்பதிக்கு திருவள்ளூர், காளஹஸ்தி ஆகிய இரு மார்க்கத்திலும் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. மேலும் அக்டோபர் 10-ஆம் தேதி இப்பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தது முதல் தமிழக அரசுப் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டு, அனைத்துப் பேருந்துகளும் இங்கிருந்தே முழு அளவில் செல்கின்றன.
இனி கோயம்பேட்டிலிருந்து ஒரு பேருந்து கூட ஆந்திர மார்க்கத்தில் இயக்கப்பட மாட்டாது. இதற்காக கோயம்பேட்டில் அமைக்கப்பட்டிருந்த அலுவலகத்தை மாதவரம் பேருந்து நிலையத்துக்கு மாற்றியுள்ளோம். பொதுமக்கள் அனைவரும் ஆந்திர மார்க்கத்துக்குச் செல்ல வேண்டுமெனில், மாதவரத்துக்குத்தான் இனி செல்ல வேண்டும். அங்கிருந்து 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் மாதவரம் வந்து செல்வதற்கான இணைப்புப் பேருந்துகளும் போதிய அளவில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளதால் 2 முதல் 3 மணி நேரம் பயண நேரம் குறையும் என்றனர் அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com