நூலகரை நியமிக்காததால் நூலகத்தில் வீணாகும் புத்தகங்கள்

திருத்தணி முருகன் கோயில் சார்பில் இயங்கி வரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நூலகத்திற்கு இதுவரை நூலகர் நியமிக்கப்படாததால் ஆயிரத்திற்கும்


திருத்தணி முருகன் கோயில் சார்பில் இயங்கி வரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நூலகத்திற்கு இதுவரை நூலகர் நியமிக்கப்படாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் நூலகக் கட்டடம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தெருவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிறு வயதில் விளையாடியதால், தெருவிற்கும், நூலகத்திற்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. இந்த நூலகத்தில், பொது அறிவு, கல்வி, சிறுகதை, மகாபாரதம், ராமயாணம் போன்ற பல்வேறு அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தற்போது உள்ளன.
இது தவிர, அனைத்து செய்தித்தாள்கள், மாத மற்றும் வார இதழ்களும் நூலகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. வாசகர்கள் படிப்பதற்கு வசதியாக மேஜைகளும், இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. 
இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் நூலகத்திற்கு ஆறு ஆண்டுகளாக நூலகர் நியமிக்கப்படவில்லை. மாறாக கோயில் ஊழியர் ஒருவர் மட்டுமே நூலகத்தைத் திறந்து, தினசரி, வாரப் பத்திரிகைகளை வாசகர்கள் படிப்பதற்கு வழங்குகிறார்.
நூலகர் பணியிடம் காலியாக உள்ளதால், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால், புத்தகங்கள் தூசு படிந்து வீணாகி வருகின்றன. நூலகத்துக்கு வரும் வாசகர்களும் ஏமாற்றத்துடன் செய்தித்தாள்கள் மற்றும் சில வாரப் பத்திரிகைகளை மட்டும் படித்துவிட்டுச் செல்கின்றனர். எனவே, கோயில் நிர்வாகம் வாசகர்கள் நலன்கருதி, நூலகர் ஒருவரை நியமித்து, புத்தகங்களைப் படிப்பதற்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com