புதிய மின் மாற்றி அமைக்க மணவூர் மக்கள் கோரிக்கை

குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பழுதாகி வருவதைத் தடுக்கும் வகையில்


குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பழுதாகி வருவதைத் தடுக்கும் வகையில் புதிய மின்மாற்றி அமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மணவூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து மணவூர் கார்த்திகேயன் நகரைச் சேர்ந்த குடியிருப்போர் மற்றும் பொதுமக்கள் சார்பில், திருவாலங்காடு மின்வாரிய பொறியாளரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவாலங்காடு அருகே உள்ளது மணவூர் ரயில் நிலையம். அதன் அருகில் உள்ள கார்த்திகேயன் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் ஒரே ஒரு மின்மாற்றி மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், அதிக குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளதால், மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. 
மேலும், மின்சாரம் கடத்தும் மின் இணைப்புக் கம்பிகளும் பழையதாக உள்ளன. இதனால், ஒவ்வொரு குடியிருப்புக்கும் 240 வோல்ட் என்ற நிலையான மின் அளவுக்கு பதிலாக காலை முதல் மாலை வரையில் 180 வோல்ட், மாலை முதல் இரவு முழுவதும் 130-140 வோல்ட் என்ற அளவில் என குறைந்த அளவு மின் விநியோகம் உள்ளது. 
இதுபோன்ற நேரங்களில், மின்சாதனங்கள் இயங்காத காரணத்தால் வெக்கை காரணமாக பெரியவர்கள், குழந்தைகள் வீட்டிற்குள் இருக்க முடியாத சூழ்நிலை உள்ளது. குறைவான மின் விநியோகத்தால், தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, குடிநீர் மோட்டார், மின் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட அனைத்து மின் சாதனப் பொருள்களும் பழுதாகி விடுகின்றன. 
அத்துடன், மின் விளக்குகள் எரியாததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. 
எனவே, இப்பகுதிகளுக்கு மின்சாரம் அளிக்கும் மின்மாற்றி வெகு தொலைவில் உள்ளதால், குடியிருப்புகளின் அருகிலேயே புதிய மின்மாற்றி அமைக்க வலியுறுத்தி மின்வாரிய பொறியாளரிடம் நேரில் அளித்த மனுவில் மணவூர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com