பொது மயானத்துக்கு பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை

திருவள்ளூர் அருகே தனிநபர் நிலத்தைப் பெற்று பொது மயானத்திற்குத் தேவையான பாதையை அமைக்க

திருவள்ளூர் அருகே தனிநபர் நிலத்தைப் பெற்று பொது மயானத்திற்குத் தேவையான பாதையை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில்  மணவாளநகர் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு கூவம் ஆற்றோரம் உள்ள பகுதியை மயானமாகப் பயன்படுத்தி வந்தனர். இந்த மயானத்திற்கு செல்வதற்கு போதுமான பாதை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த தனிநபருக்குச் சொந்தமான நிலம் வழியாக சடலங்களைக் கொண்டு சென்று இறுதிச்சடங்குகளை நடத்தி வந்தனர். 
மயானம் செல்வதற்கு தனியாகப் பாதை அமைத்துத் தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். 
கடந்த வாரம் பாதை வசதி செய்து தராததால் மயானத்திற்கு சடலத்தைக் கொண்டு செல்லும்போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு பாதை வசதி செய்து தர ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். 
அதன் அடிப்படையில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அப்பகுதியைச் சேர்ந்த செல்லதுரை என்பவரிடம் பாதை அமைப்பது தொடர்பாக கலந்தாய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அவருக்கு சொந்தமான நிலத்தை மயானத்திற்கு பாதை அமைப்பதற்காக பெற்றனர். இதையடுத்து அப்பகுதியில் பாதைக்கான எல்லைக்கல் நடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது வெங்கத்தூர் ஊராட்சி செயலர் மகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com