18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும்: தங்க. தமிழ்செல்வன் நம்பிக்கை

சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், தங்களுக்கு  ஆதரவாகவே தீர்ப்பு வரும்

சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், தங்களுக்கு  ஆதரவாகவே தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாக அமமுக கட்சியின்  கொள்கை பரப்புச் செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட  ஆண்டிப்பட்டி எம்எல்ஏவுமான  தங்க. தமிழ்செல்வன் தெரிவித்தார்.
திருவள்ளூர்-ஆவடி சாலையில் தனியார் உணவகத் தொடக்க விழாவில்  பங்கேற்பதற்காக புதன்கிழமை வந்திருந்த அமமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியுள்ளார். இதுவரையில் அவரை கைது செய்ய முடியாத அரசாகவும், குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் சிபிஐ சோதனையிட்டு, ஊழல் நிரூபிக்கப்பட்ட பின்னரும், குற்றவாளிகளை கைது  செய்ய முடியாத செயலற்ற அரசாகவும் அதிமுக அரசு இருந்து வருகிறது. சட்டப்பேரவை  உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நிச்சயமாக எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்  என்று நம்பிக்கை உள்ளது. மேலும், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை  இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுவதோடு, கட்டாயம் வெற்றியும் பெறும். 
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி  இடைத்தேர்தலில் 20 ரூபாய் தாள்களைக் கொடுத்து ஓட்டு வாங்கியதால் தமிழகத்தில் 20 ரூபாய் நோட்டு  செல்லாததாகிப் போனதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசி வருகிறார். 
அவர் மீதுள்ள ஊழல் வழக்கு விவகாரம் பின்னர் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார். நிகழ்வில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி  எம்எல்ஏ டி.எ.ஏழுமலை, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியச் செயலாளர் இளங்கோவன், கடம்பத்தூர் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com