பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்

திருவள்ளூர் அருகே சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும், இப்பட்டியலில் பெயர் இல்லாதோர் புதிதாக பெயர் சேர்க்கவும்,


திருவள்ளூர் அருகே சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும், இப்பட்டியலில் பெயர் இல்லாதோர் புதிதாக பெயர் சேர்க்கவும், அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஒவ்வொரு பாகத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வாக்காளர் பட்டியல் உள்ளது.
இந்நிலையில், வாரத்தில் குறிப்பிட்ட சனிக்கிழமைகளில் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தவும், அப்போது வாக்காளர் பட்டியல் விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நத்தமேடு ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு சனிக்கிழமை வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் சதீஷ் தலைமை வகித்தார். இதில், கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி பேசுகையில், பொதுமக்கள் பார்வைக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொருவரும் பார்த்து, திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுவரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருப்போர் புதிதாக பெயர் சேர்க்கப் படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் படிவம்-7, வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள் திருத்தம் மேற்கொள்ளப் படிவம்-8, ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு முகவரி மாற்றிப் பதிவு செய்யப் படிவம்-8ஏ ஆகிய படிவங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான முகாம் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 வரையிலும், சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 23) மற்றும் அக்டோபர் 7, 14 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில், படிவங்களை நேரில் அளித்து பயன்பெறலாம் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில், கிராம நிர்வாகிகள் முனுசாமி, குமரேசன், மகளிர் குழுவைச் சேர்ந்த சீதா, ரூபி உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com