காமராஜர் துறைமுகத்தில் மலேசிய கப்பலில் இருந்து மணல் இறக்கும் பணி தொடக்கம்

மலேசியாவிலிருந்து தனியார் நிறுவனம் மூலம் சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு சரக்குக் கப்பலில் கொண்டு வரப்பட்ட மணலை துறைமுகத்தில் இறக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது.
காமராஜர் துறைமுகத்தில் மலேசிய கப்பலில் இருந்து மணல் இறக்கும் பணி தொடக்கம்

மலேசியாவிலிருந்து தனியார் நிறுவனம் மூலம் சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு சரக்குக் கப்பலில் கொண்டு வரப்பட்ட மணலை துறைமுகத்தில் இறக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது.
 தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு தொடர்வதால், மலேசிய நாட்டிலிருந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.ஆர்.எம். ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த 2017- ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 55 ஆயிரம் டன் மணலை கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இறக்குமதி செய்தது. இந்த மணலை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், இறக்குமதி செய்யப்பட்ட மணலை டன் ஒன்றுக்கு ரூ. 2050-க்கு தமிழக அரசு பெற்றுக் கொள்ள உத்தரவிட்டது.
 தனியார் நிறுவனங்கள் மூலம் இறக்குமதி: இதையடுத்து பொதுப் பணித் துறைக்கு மணலை இறக்குமதி செய்து வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மதன்பூரைச் சேர்ந்த இன்ரிதம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் டன் மணலை வழங்குமாறு பொதுப்பணி துறை சார்பில் உத்தரவு வழங்கப்பட்டது.
 இதையடுத்து மலேசிய மணலை இறக்குமதி செய்யும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டது. மலேசியா நாட்டின் பஹாங் மாநிலம் பீகான் துறைமுகத்திலிருந்து 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணலை ஏற்றிய எம்.வி.அவ்ரலியா என்ற கப்பல் ஞாயிற்றுக்கிழமை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள செட்டிநாடு முனையத்தை வந்தடைந்தது.
 அதிகாலை சுமார் 4 மணிக்கு கப்பல் தளத்தை அக்கப்பல் எட்டியதைத் தொடர்ந்து, இயந்திரங்கள் மூலம் மணலை இறக்கும் பணி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை பாதியளவுக்கு மணல் இறக்கப்பட்டது. திங்கள்கிழமை இரவுக்குள் மீதி மணல் இறக்கப்பட்டுவிடும் என முனைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 பொதுப்பணித் துறை நேரடி விற்பனை: கப்பலிலிருந்து மணல் முழுமையாக இறக்கப்பட்டதும் சுங்கத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு மணல் விடுவிக்கப்படும். அதைத் தொடர்ந்து இன்ரிதம் நிறுவனம் பொதுப்பணித் துறையிடம் அந்த மணலை ஒப்படைக்கும். அதைத் தொடர்ந்து விற்பனையைப் பொதுப்பணித் துறை தொடங்கும்.
 ஏற்கெனவே தூத்துக்குடியில் இருக்கும் மணலை வலைதளம் மூலம் நான்கரை டன் எடை கொண்ட ஒரு யூனிட் மணல் ரூ.9,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுமா? அல்லது அதைவிட குறைந்த விலைக்கு விற்கப்படுமா என்பது இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com