விதிமுறைகளை மீறி சவ்வுடு மண் அள்ளுவதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் அருகே ஏரியில் விதிமுறைகளை மீறி சவ்வுடு மண் அள்ளுவதைத் தடுக்க பொதுப்பணித்துறை

திருவள்ளூர் அருகே ஏரியில் விதிமுறைகளை மீறி சவ்வுடு மண் அள்ளுவதைத் தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  திருவள்ளூர் அருகே போளிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம்  2ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 
இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு  ஏரிகளைத் தூர்வாரும் வகையில், இந்த ஏரியில் சவ்வுடு மண் எடுக்க பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது. 
அதன்படி, அனுமதித்த பகுதியில் 3 அடி ஆழத்துக்கு மட்டுமே சவ்வுடு மண் அள்ள வேண்டும்.  அதேபோல், விடுமுறை நாள்களில் மட்டுமே சவ்வுடு மண் எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் லாரியில் மூடப்பட்ட நிலையில் மண் கொண்டு செல்ல வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளுக்கு உள்பட்டு, 30 நாள்களில் நாள்தோறும் 100 லோடுகள் வீதம் சுமார் 3 ஆயிரம் லோடுகளுக்கு மட்டுமே பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது.
   ஆனால், இந்த விதிமுறைகளை மீறி ஏரியில் பல்வேறு இடங்களில் தனியார் மண் அள்ளி வருகின்றனர். மண் அள்ள ஒப்பந்தம் பெற்ற தனிநபர்கள் விதிமுறைகளை மீறி இரவும் பகலும் எந்த நேரமும் ஏரியில் இருந்து சவ்வுடு மண்ணைக் கடத்தி  வருகின்றனர். அதேபோல், சவ்வுடு மண் என்ற ஒப்பந்தத்தைக் காட்டி ஆற்று மணலையும் திருடி வருகின்றனர்.  
இந்த பகுதியில் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நாள்தோறும் 100 லாரிகளில் சவ்வுடு மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால், இந்த ஏரியை நம்பி இருக்கும் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள், எலுமிச்சை, மாந்தோப்புகளுக்கான நீர் ஆதாரம் பாதிக்கும் நிலையுள்ளது. அதேபோல், அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால், ஏரியில் பள்ளங்கள் ஏற்பட்டு, குட்டைகளாக நீர் தேங்கி, பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
    இது குறித்து கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏரிகளில் விதிமுறைகளுக்கு உள்பட்டுத்தான் சவ்வுடு மண் அள்ளுவதற்கு பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால், நாள்தோறும் அதிக அளவில் சவ்வுடு மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். அதன் பேரில் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com