"மாணவர்கள் விடுதிகளில் முறைகேடுகளைத் தவிர்க்க பயோ மெட்ரிக் முறை'

அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவ, மாணவியர் விடுதிகளில் முறைகேடுகளைத் தவிர்க்கும்

அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவ, மாணவியர் விடுதிகளில் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஆதிதிராவிடர் நல ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார்.
பின்னர், பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆதிதிராவிடர் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். 
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் ஆதிதிராவிட மக்களுக்குச் சென்றடைகிறதா? என்பதை ஆய்வு செய்யும் நோக்கிலேயே மாவட்டந்தோறும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலும் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் தனிநபர் சுகாதார வளாகம் அமைத்துத் தரும்படி, 300-க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, ஆய்வு மேற்கொண்டதில் விழுப்புரம், கோவை, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டும் வருகின்றன.  
ஒவ்வொரு மாநில அளவில் செயல்பட்டு வரும் அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் இருப்பதாகக் காண்பித்து ரேஷன் பொருள்களை முறைகேடு செய்யும் போக்கு இருந்து வருகிறது. இதுபற்றி கோவையில் ஆய்வு செய்ததின் மூலம் அறிந்து கொண்டேன். வருங்காலங்களில் விடுதிகளில் முறைகேடுகளைத் தவிர்க்க, ஒவ்வொரு மாணவ, மாணவியர் விடுதியிலும் கண்காணிப்பு கேமராவுடன் பயோ மெட்ரிக் கருவி பொருத்தவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளேன். இதை ஏற்று ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளன. 
எனவே தமிழகத்திலும் செயல்படுத்துவதற்கு ஆதிதிராவிட நலத் துறை ஆணையரிடம்  வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிநபர் கழிப்பறைகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு தாராளமாக பெற்றுக் கொள்ளலாம், அதற்குத் தேவையான நிதி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
நிகழ்ச்சியில், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, சார் ஆட்சியர் ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலர் து.சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, நகராட்சி ஆணையர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்து 
கொண்டனர்.     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com