கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத நிலையில் கிராமங்களில் கோடைக்காலத்தில் குடிநீர்

திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத நிலையில் கிராமங்களில் கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால், இதைச் சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பேரூராட்சிகள், 5 நகராட்சிகள் உள்ளன. 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளுக்கு உள்பட்ட 3,900 குக்கிராமங்கள் இருக்கின்றன. நகரங்களில் வசித்து வருவோருக்கு நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் மூலமும், கிராமங்களில் ஒன்றிய நிர்வாகம் மூலமும் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில் இம்மாவட்டத்தில் குடிநீருக்காக ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்ந்தோடும் ஆறுகளோ, தண்ணீர் தேங்கியிருக்கும் ஏரி, குளங்களோ எதுவும் கிடையாது. இங்கு, கொசஸ்தலை, ஆரணி, கூவம் ஆறுகளும் அவற்றைச் சார்ந்த 1,945 ஏரிகளும் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. 
இந்த மாவட்டத்தில் சராசரி மழையளவு 1152 மி.மீட்டர் ஆகும். எனினும் கடந்த ஆண்டு வெறும் 759 மி.மீட்டர் மட்டுமே மழை பொழிந்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பின்னர் போதுமான பருவமழை பெய்யாததால், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் இருப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் 890 மி.மீட்டர், 2015-ஆம் ஆண்டில் 1,955 மி.மீட்டர், 2016-ஆம் ஆண்டில் 829 மி.மீட்டர், 2017-ஆம் ஆண்டில் 1,163 மி.மீட்டர், 2018-ஆம் ஆண்டில் 759 மி.மீட்டர் என்ற அளவில் மழை பெய்துள்ளது. மேலும், ஏரிகளுக்கு  நீர் வழித்தடமான கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கால்வாய்களில் போதுமான நீர் இருப்பு இல்லை. 
இதனால் ஆழ்குழாய்க் கிணறுகள் போன்ற நீர் ஆதாரங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. ஏரிகளில் மணல் மேவி காணப்படுவதால், அதிகமான நீரைத் தேக்கும் நோக்கில் அவற்றைத் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
இது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. அதனால், பொதுமக்கள் குடிநீர்க் குழாய் இணைப்பில் இருந்து நேரடியாக மோட்டார் வைத்து நீரை உறிஞ்சும் சூழ்நிலை உள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பூண்டி, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியப் பகுதிகளில் 993 கிராமங்களில் இந்த கோடைக் காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. அதனால், இப்பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறுகளை தூர்வாரவும், புதிதாக அமைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியது:
திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் 3,900 குக்கிராமங்கள் உள்ளன. 2016-ஆம் ஆண்டில் இருந்து இந்த மாவட்டத்தில் சராசரி அளவுக்குக் கூட மழை பெய்யாததால், ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டில் பலத்த மழை 
பெய்து, ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்ததால் கடந்த காலங்களில் கிராமங்களுக்கு பற்றாக்குறையின்றி குடிநீர் விநியோகிக்கப்பட்டது. கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத நிலையில் நீர் ஆதாரங்களில் போதுமான நீர் இருப்பு இல்லை. இதனால் நடப்பு ஆண்டில் 993 கிராமங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 
கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையைத் தவிர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்துதல், புதிதாக அமைத்தல், சேதமடைந்த நிலையில் காணப்படும் ஆழ்துளைக் கிணறுகளை சீரமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இது தவிர, கிராமங்ளில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் ஊராட்சிகள் மூலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன், யாராவது திருட்டுத்தனமாக மோட்டார் மூலம் குழாய் இணைப்பில் குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com