திருவள்ளூர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க ரூ. 22 லட்சம் ஒதுக்கீடு

திருவள்ளூர் நகராட்சியில்  கோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் புதிதாக

திருவள்ளூர் நகராட்சியில்  கோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கவும், பழுதானவற்றை சீரமைக்கவும் ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக  நகராட்சி ஆணையர் முருகேசன் தெரிவித்தார். 
 இதுகுறித்து அவர் கூறியது: திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நாள்தோறும் நகராட்சி மூலம் 55 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இதற்கான குடிநீர் வெள்ளியூர் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, குழாய் பதித்து, நகராட்சிக்கு நாள்தோறும் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதுபோல், திருவள்ளூர் அருகே பட்டரைப்பெரும்புதூர், புங்கத்தூர் ஏரிப்பகுதியோரங்கள் உள்பட 13 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதை நகராட்சி பகுதிகளில் அமைத்துள்ள 13 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் ஏற்றி சேகரித்து, தெருக்குழாய்கள், வீட்டு இணைப்பு குழாய்கள் மூலம், குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  
 இந்நிலையில், திருவள்ளூர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு போயுள்ளன. இதுபோன்ற காரணங்களால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால், வரும் கோடைக்காலத்தில் நகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவும், புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கவும், பழுதடைந்த நிலையில் உள்ள நீர் ஆதாரங்களை சீரமைக்கவும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதற்காக நகராட்சிக்கு அரசு ரூ. 22 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.    
  இந்த நிதி மூலம் திருவள்ளூர் நகராட்சிக்குள்பட்ட குடிநீர் பிரச்னை ஏற்படும் பகுதிகளான எடப்பாளையம், விக்னேஸ்வரா நகர், ராஜம்பாள் தேவி பூங்கா பகுதி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிதாக 10 ஆழ்குழாய் கிணறுகளும் அமைக்கப்பட உள்ளன. அதேபோல் ஏற்கெனவே உள்ள ஆழ்குழாய் கிணற்றை ஆழப்படுத்தி, சேதமடைந்த குழாய்களை மாற்றி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com