கூட்டுறவு வார விழா: 5,516 பேருக்கு ரூ.16.72 கோடி கடனுதவி: அமைச்சர் வழங்கினார்

ஆரணியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 5,516 பயனாளிகளுக்கு ரூ.16.72 கோடியிலான கடனுதவிகள்

ஆரணியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 5,516 பயனாளிகளுக்கு ரூ.16.72 கோடியிலான கடனுதவிகள் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். 
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் 65-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 5,516 
பயனாளிகளுக்கு ரூ.16.72 கோடியிலான கடனுதவிகள் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் சேவூர் 
எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழாவில் 270 சுயஉதவிக் குழுக்களுக்கும், 1,687 விவசாயிகளுக்கும் ரூ.16.72 கோடி அளவில் கடன் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் 23 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நவீன வசதிகள் மற்றும் உள் கட்டமைப்புகளுடன் கூடிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து தலா ரூ.20 லட்சம் வீதம் வட்டியில்லாக் கடனாக ரூ.4.60 கோடி அனுமதிக்கப்பட்டு அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், ஒரு கூட்டுறவு நகர வங்கி, மூன்று தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் தலா ரூ.4.17 லட்சத்தில் உயர்தர பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தலா ரூ.4 லட்சத்தில் சூரிய ஒளி மின்கலம் அமைக்கப்பட்டுள்ளது. 30 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 3 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 
2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை நவீனமயமாக்க தலா ரூ.20 லட்சம், 5 கூட்டுறவு நிறுவனங்களில் வணிக வளாகம் கட்ட ரூ.1.50 கோடி, 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சூரிய மின்கலன் அமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவிகாபுரம் மற்றும் கீழடிகாடுங்காலூர் ஆகிய இடங்களில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகளை நிறுவ ஆணை வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு ஆதாய விலை கிடைக்கும் வகையில், அந்தப் பொருள்களை பாதுகாத்து வைக்கவும், தானிய ஈட்டுக் கடன் வழங்கவும், முழுவதும் மானிய அடிப்படையில் 100 மெட்ரிக் டன், 500 மெட்ரிக் டன், 1,000 மெட்ரிக் டன் மற்றும் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 285 கிடங்குகள் ரூ.33.38 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. 
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் 159 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 3 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு கிராமப்புற பொதுமக்களுக்குத் தேவையான வருவாய்த் துறை சான்றிதழ்கள் மற்றும் சமூக நலத் துறை சான்றிதழ்கள், இதர இணைய வழி சேவைகள் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பை, பாராட்டுச் சான்றிதழை அமைச்சர் வழங்கினார். மேலும், மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பரிசுக் கேடயம் வழங்கிப் பாராட்டினார்.
விழாவில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் பாரி பி.பாபு, நகர, ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணி நீலமேகம், எல்.என்.துரை, முன்னாள் எம்எல்ஏ ஜெமினி ராமச்சந்திரன், நளினிமனோகரன், எ.கே.அரங்கநாதன், முன்னாள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதா அருணாச்சலம், பட்டுகூட்டுறவு சங்கத் தலைவர்கள் சேவூர் ஜெ.சம்பத், எஸ்.ஜோதிலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலர் தெள்ளார் சி.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com