மீண்டும் டயர்கள் வெடிப்பு; 10 கி.மீ. கடந்த பிறகு ஸ்ரீகோதண்டராமர் சிலை ஏற்றிய வாகனம் நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கடந்த 6 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீகோதண்டராமர் சிலை ஏற்றிய கனரக வாகனம் திங்கள்கிழமை பெங்களூரு நோக்கி புறப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கடந்த 6 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீகோதண்டராமர் சிலை ஏற்றிய கனரக வாகனம் திங்கள்கிழமை பெங்களூரு நோக்கி புறப்பட்டது. எனினும், 10 கி.மீ. தொலைவைக் கடந்ததும் மண்மலை பகுதியில் மீண்டும் கனரக வாகனத்தின் டயர்கள் வெடித்தால் அங்கு வாகனம் நிறுத்தப்பட்டது.
 வந்தவாசி வட்டம், கொரக்கோட்டை கிராமத்தில் 64 அடி உயரம், 24 அடி அகலம் 380 டன் எடை கொண்ட ஸ்ரீகோதண்டராமர் சிலை செய்வதற்கான பாறை வெட்டி எடுக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 7-ஆம் 240 டயர் கொண்ட கனரக வாகனத்தில் ஏற்றப்பட்டது.
 இந்த வாகனம் கொரக்கோட்டையில் இருந்து திண்டிவனம், செஞ்சி, சேத்பட், மங்கலம் வழியாக திருவண்ணாமலையை கடந்த 7-ஆம் தேதி இரவு வந்தடைந்தது.
 பின்னர், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 8-ஆம் தேதி காலை புறப்பட்ட கனரக வாகனம், செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதி வரை வந்தது. அந்தப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட டயர்கள் வெடித்ததால், வாகனம் அங்கேயே கடந்த 6 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.
 இதையடுத்து, சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட கனரக வாகனத்துக்கான டயர்கள், வாகனத்தில் பொருத்தப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை அம்மாபாளையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு ஸ்ரீகோதண்டராமர் சிலை ஏற்றிய கனரக வாகனம் சென்ற நிலையில், அங்கு டயர்கள் மீண்டும் வெடித்ததால் வாகனம் அங்கு நிறுத்தப்பட்டது.
 இதனிடையே, பிரமாண்டமான ஸ்ரீகோதண்டராமர் சிலையைப் பார்க்க அந்தப் பகுதியில் ஏராளமான கிராம மக்கள் குவிந்து வருகின்றனர். மேலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், மேல்மருத்தூர் ஆதிபராசக்தி கோயில்களுக்கு வாகனங்கள் மூலமும், பாத யாத்திரையாகவும் செல்லும் பக்தர்கள், ஸ்ரீகோதண்டராமர் சிலைக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் செல்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com