காணும் பொங்கல்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

காணும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் அணை

காணும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் அணை, திருவண்ணாமலையில் உள்ள ஆஸ்ரமங்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் வியாழக்கிழமை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.
தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் கிராமத்தில் உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இந்த அணை மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
படப்பிடிப்பு: இந்த அணையில் ஏராளமான திரைப் படங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ், முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமலஹாசன் உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் நடித்த திரைப்படங்கள் இந்த அணையில் படமாக்கப்பட்டுள்ளன.
அணையில் குவிந்த மக்கள்: சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, எழில்மிகு தோற்றம் கொண்ட இந்த அணைக்கு காணும் பொங்கலைக் கொண்டாட ஆண்டுதோறும் பல ஆயிரம் பொதுமக்கள் வருவது வழக்கம்.
அதன்படி, வியாழக்கிழமை திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரம் பொதுமக்கள் அணையில் குவிந்தனர்.
அணையின் எழில்மிகுத் தோற்றம், சிறுவர் பூங்கா, படகுக் குழாம், முதலைப் பண்ணை, டைனோசர், பாம்பு பொம்மைகள் உள்ளிட்டவற்றைக் கண்டு மகிழ்ந்த பொதுமக்கள், அங்கேயே உணவுகளை உண்டனர்.
சிறுவர்கள், இளைஞர்கள் பலர் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனர்.  சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் பல மணி நேரம் விளையாடி மகிழ்ந்தனர். அணையில் பிடித்து, பொறிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சாப்பிட்டனர்.
ஆஸ்ரமங்களில்...: இதேபோல, திருவண்ணாமலை - செங்கம் சாலையில் அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே உள்ள சிறுவர் பூங்கா, திருவண்ணாமலை - வேலூர் சாலையில் அண்ணா நுழைவு வாயில் அருகே புதிதாக திறக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆஸ்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமங்களிலும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ரமணாஸ்ரம பூங்காவில் இருந்த மயில்கள், கோசாலையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழ்ந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com