வட மாநிலத் தொழிலாளர்களைக் கண்டித்து உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டம்

வேட்டவலம் அருகே விவசாய நிலத்தில் மின் கம்பிகள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவரை தாக்கிய வ


வேட்டவலம் அருகே விவசாய நிலத்தில் மின் கம்பிகள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவரை தாக்கிய வட மாநிலத் தொழிலாளர்களைக் கண்டித்து, உயர் மின்கோபுரங்கள் மீது 30-க்கும் மேற்பட்டோர் ஏறி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேட்டவலத்தை அடுத்த செல்லங்குப்பம் பகுதி விசாயிகள் கண்ணதாசன், வனராஜ், ராஜ் ஆகியோரின் விவசாய நிலங்களில் தமிழ்நாடு அரசு மின்வாரியம் சார்பில், உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் ஒரு பகுதியாக பக்கத்தில் உள்ள ராணி என்ற விவசாயியின் நிலத்தில் இரும்புக் கம்பிகள் புதைக்கப்பட்டன.
தகவலறிந்த ராணி விரைந்து வந்து, யார் அனுமதியுடன் இரும்புக் கம்பிகளை புதைத்துள்ளீர்கள், உடனடியாக என் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளை அகற்றுங்கள் என்று பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்களிடம் கூறினார். அங்கு வந்த ராணியின் உறவினர் ரஜினி ஏழுமலையும், வட மாநிலப் பணியாளர்களைக் கண்டித்தார்.
ஆத்திரமடைந்த வடமாநிலப் பணியாளர்கள் ரஜினி ஏழுமலையைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதையறிந்த ராணி மகன் வினோபா, உறவினர் செந்தில்குமார் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் வந்து ரஜினி ஏழுமலையைத் தாக்கிய வடமாநில பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உயர்மின் கோபுர இரும்புக் கம்பிகள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கீழ்பென்னத்தூர் வட்டாட்சியர் ஜெயப்பிராகாஷ் நாராயணன், வேட்டவலம் காவல் ஆய்வாளர் ராணி, விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் பலராமன் ஆகியோர் வந்து உயர்மின் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இறுதியாக, விளை நிலங்களில் விளைந்துள்ள பயிர்களை அறுவடை செய்யும் வரை உயர் மின் கோபுரப் பணியை நிறுத்தி வைக்கிறோம். ரஜினி ஏழுமலையைத் தாக்கிய வடமாநில இளைஞர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து, உயர்மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இறங்கி வந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com