சாத்தனூர் அணையில் மூழ்கிய மற்றொருவரின் சடலம் மீட்பு: இருவர் கைது

செங்கம் அருகே சாத்தனூர் அணைப் பகுதியில் திருட்டுத்தனமாக மீன் பிடித்தவர்களை தடுக்கச் சென்றபோது நிகழ்ந்த

செங்கம் அருகே சாத்தனூர் அணைப் பகுதியில் திருட்டுத்தனமாக மீன் பிடித்தவர்களை தடுக்கச் சென்றபோது நிகழ்ந்த மோதலில் இருவர் நீரில் மூழ்கினர். இதில், ஒருவரின் சடலம் ஏற்கெனவே மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம் அருகே உள்ள சாத்தனூர் அணையில் மீன் பிடிப்பதற்கு தனியாருக்கு ஓராண்டுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த அணையில் திருட்டுத்தனமாக மீன்கள் பிடிக்கப்படுவதை அறிந்த குத்தகைதாரர், அதனைக் கண்காணித்து, தடுப்பதற்காக ஊழியர்களை பணியமர்த்தியிருந்தார்.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சிலம்பரசன் (27), முனியப்பன் (35), சந்தோஷ் (25), மூர்த்தி (45), செந்தில் (35) ஆகியோருக்கும், அணையில் திருட்டுத்தனமாக மீன் பிடிக்கும் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த சந்தோஷ், செந்தில் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இவர்களில் சந்தோஷின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
இந்த நிலையில், செந்திலின் சடலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரை ஒதுங்கியது. பின்னர், அவரது சடலம் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, கரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கண்ணு மகன் சிவா (43), ஆணைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மோகன் (48) ஆகிய இருவரையும் செங்கம் போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீரில் மூழ்கி இறந்த சந்தோஷ், செந்தில் ஆகியோரின் சொந்தக் கிராமமான மல்லிகாபுரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அதிரடிப்படை போலீஸார் அந்தக் கிராமத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com