வைகுண்ட ஏகாதசி: தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்போது தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி


திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்போது தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசிக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அவர் வெள்ளிக்கிழமை காலையில் பார்வையிட்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் கருட சேவை தினத்துக்கு அடுத்தபடியாக வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு தேவஸ்தானம் அதற்கேற்ற வகையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 18ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 12.30 மணிக்கு வைகுந்த வாயில் திறக்கப்பட உள்ளது. அன்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 16-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணி முதல் வைகுண்டம் காத்திருப்பு அறை 1 மற்றும் 2-இல் அனுமதிக்கப்படுவர்.
அந்த அறைகள் நிரம்பியவுடன் ஆழ்வார் குளம் தரிசன வரிசை, நாராயணகிரி தோட்டத்தில் உள்ள நிழற்பந்தலில் காத்திருக்க அனுமதிக்கப்படுவர். அவை நிரம்பியவுடன், மேதரமிட்டா அருகில் உள்ள எண் 1 கதவு வழியாக மாடவீதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தலிலும், அது நிறைந்தவுடன், வெளிவட்டச் சாலையில் உள்ள தரிசன வரிசைகள் என ஒவ்வொரு பகுதியாக பக்தர்கள் காத்திருக்க அனுமதிக்கப்படுவர். சரியாக 28 மணிநேர காத்திருப்பை அடுத்து, 18ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தர்ம தரிசனம் தொடங்கும்.
அதன் பின் தரிசன வரிசை நகரத் தொடங்கும். 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் வைகுந்த வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்களின் வருகைக்கு ஏற்றவாறு குடிநீர், சாப்பாடு, பானங்கள், சிற்றுண்டிகள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் வழங்கப்படும். அதேபோல் பக்தர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல் அருகில் கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com