சுற்றுச்சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: ஆட்சியரிடம் பொய்கை கிராம மக்கள் மனு

புதிதாக சுற்றுச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொய்கை அருகே பிள்ளையார் குப்பம், புத்தூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் மனு


புதிதாக சுற்றுச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொய்கை அருகே பிள்ளையார் குப்பம், புத்தூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொய்கை பிள்ளையார்குப்பம், புத்தூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், பொய்கை பகுதியில் சுற்றுச் சாலை அமைப்பதாகக் கூறி, கிராம நிர்வாக அலுவலர், அதிகாரிகள் விவசாய நிலங்களை அளவீடு செய்து கற்களை நட்டுள்ளனர்.
செதுவாலையில் இருந்து விரிஞ்சிபுரம் வழியாக காட்பாடி சாலைக்கும், பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரியில் இருந்து தங்கக்கோயில் வழியாக ஆரணி, திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து தங்கக்கோயில் வழியாக புத்தூர், பூதூர், நரசிங்கபுரம், நாடாமங்கலம் வழியாக நாற்கர சாலையை அடையலாம். இந்த சாலையை அகலப்படுத்தினாலே போக்குவரத்து சீராகும். புதிய சுற்றுச்சாலை அமைப்பதால் விவசாய நிலங்கள் பறிபோவதுடன், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, பொய்கை பகுதியில் சுற்றுச்சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
வாலாஜா சீக்கராஜபுரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், சீக்கராஜபுரத்தைச் சேர்ந்த சாதிக்பாஷா என்பவர் நடத்தி வந்த மாதச்சீட்டு, ஏலச் சீட்டுகளில் 50-க்கும் மேற்பட்டோர் ரூ. 2 லட்சம்,
ரூ. 5 லட்சம் என பல்வேறு சீட்டுகளில் தவணைத் தொகை செலுத்தி வந்தோம். தவணை முடிந்து பல மாதங்களாகியும் சீட்டுப் பணத்தை திருப்பித் தரவில்லை. மொத்தம் ரூ. 1.50 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. சீட்டு மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவும், பணத்தை உரியவர்களுக்கு பெற்றுத்தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
வாலாஜா அருகே அனந்தலை கிராம மக்கள் அளித்த மனுவில், அனந்தலை கிராமத்தில் 23 கல்குவாரிகள் உள்ளன. இங்கு விதிகளை மீறி கற்களை வெட்டியுள்ளனர். வெடி வைப்பது, பாறைகளை தகர்ப்பது போன்ற காரணங்களால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்குவாரி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், நாட்டறம்பள்ளியை அடுத்த கேதாண்டப்பட்டியில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் இரு விவசாயிகள் 30 சவரன் நகைகளை அடகு வைத்துள்ளனர். சில நாள்களுக்கு முன்பு அந்த நகைகளை மீட்கச் சென்றபோது, ஊழியர்கள் அடகு வைத்த நகை இல்லை எனக் கூறியுள்ளனர். விவசாயிகள் அடகு வைத்த நகைகளை வேறு இடத்தில் அடகு வைத்து ஊழியர்கள் மோசடி செய்துள்ளனர். இதேபோல், ஆயல், ஆதியூர், திருப்பத்தூர் கூட்டுறவு சங்கங்களிலும் ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கேட்டு, சுமார் 400 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com