பாஜகவின் செயல்பாடுகளைத்தான் எதிர்க்கிறோம்: திருமாவளவன்

பாஜக கொள்கை, கோட்பாட்டு ரீதியாக தேச நலனுக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக

பாஜக கொள்கை, கோட்பாட்டு ரீதியாக தேச நலனுக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட முன்வந்துள்ளன. பாஜகவின் பலத்தை வைத்து எதிர்க்கவில்லை, அவர்களின் செயல்பாடுகளை வைத்தே எதிர்க்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் "தேசம் காப்போம்' மாநாடு திருச்சியில் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வேலூரில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இது ராஜபக்சேவுக்கும், மைத்திரிபால சிறிசேனாவுக்கும் மிகப்பெரிய தலைக்குனிவாகும். தனது நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்று அதிபர் சிறிசேனா பதவி விலகுவதே சரியாக இருக்கும்.
பாஜக ஆபத்தான கட்சியா, இல்லையா என்பதற்கு நேரடியாக பதிலளிக்க விரும்பாமல் பலசாலியா, இல்லையா எனக் கூறி ரஜினி திசைதிருப்பியுள்ளார். 
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் எனக் கூறுவர். அப்படி என்றால் படையைவிட பாம்பு வலிமையானது என்பது பொருள் அல்ல. படையே நடுங்கும் அளவுக்கு பாம்பு நஞ்சானது, ஆபத்தானது என்பது பொருள். எனவே, 10 பேர் சேர்ந்து பாம்பை அடிப்பதால் பாம்பு பலசாலியாகி விடாது. அப்படித்தான் பாஜகவை பார்க்கிறோம். 
பாஜகவின் பலத்தை வைத்து எதிர்க்கவில்லை, அவர்களின் செயல்பாடுகளை வைத்தே எதிர்க்கிறோம். பாஜக கொள்கை, கோட்பாட்டு ரீதியாக தேச நலனுக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட முன்வந்துள்ளன. 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக அரசுக்கு மாற்று கருத்து இல்லை. 
இனி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால்தான் 7 பேரை விடுவிக்க மாட்டார்கள் என்ற விமர்சனம் இருந்தது. 
தற்போது காங்கிரஸுக்கு நேர்எதிரான பாஜகவும் அதேநிலையைத்தான் மேற்கொண்டு வருகிறது.  7 பேரை விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும் ஆளுநர் காட்டும் தயக்கம், ஆளுநருடையது அல்ல, மோடியின் தயக்கம் என்பதைத்தான் உணர்த்துகிறது. 
எனவே, 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதல்வர் ஆளுநரை சந்தித்துப் பேச வேண்டும். 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com