தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும்: அலுவலர்களுக்கு முதன்மைச் செயலர் உத்தரவு

பருவமழை குறைபாட்டால் எதிர்வரும் நாள்களுக்கான தண்ணீர்த் தேவையை அலுவலர்கள் முன்கூட்டியே

பருவமழை குறைபாட்டால் எதிர்வரும் நாள்களுக்கான தண்ணீர்த் தேவையை அலுவலர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்து மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் வளர்ச்சித் திட்டப் பணிகளின் தற்போது நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான சுனில் பாலிவால் தலைமை வகித்தார்.
இதில், வேலூர் மாவட்ட உள்ளாட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் பராமரிப்பு, எல்.இ.டி. விளக்குகளின் எண்ணிக்கை, அவற்றில் பழுதடைந்த விளக்குகள், அவற்றை சீரமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்த அவர், பழுதடைந்துள்ள மின்விளக்குகளைச் சீர்செய்யவும், எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கவும் அறிவுறுத்தினார். மேலும், பள்ளிகள், சுகாதார வளாகங்கள் பராமரிப்பு, கழிப்பறை பயன்படுத்துவதுடன், கை, கால்களை சுத்தமாகக் கழுவுதல், இதர சுகாதாரப் பழங்கங்களையும் கடைப்பிடிக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் அளவு குறித்து கேட்டறிந்த முதன்மைச் செயலர், அனைத்து மக்களுக்கும் முறையான குடிநீர் வழங்கவும், பருவமழை குறைபாட்டால் எதிர்வரும் நாள்களுக்கான தண்ணீர் தேவையை அலுவலர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்து மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டார். 
வேளாண்மைத் துறையின் கீழ் அந்தந்த வட்டாரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயிர் சாகுபடி பரப்பளவு இலக்குகள் குறித்தும், வட்டாரங்களில் தற்போதைய நிலத்தடி நீர்மட்டம், அணைகள், ஏரிகளில் உள்ள நீர்மட்ட அளவுகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், வேளாண்மை, தோட்டக்கலைத் துறையின் மூலம் அளிக்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்பாட்டை அதிகரிக்கச் செய்திடவும் அறிவுறுத்தினார். 
இதேபோல், பொதுப் பணித் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை, உயர்கல்வித் துறை, வருவாய்த் துறை என அனைத்து துறை அலுவலர்களிடமும் அந்தந்த துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை விரைவாக செயல்படுத்தவும், அவற்றில் பிரச்னைகள் இருந்தால் கவனத்துக்கு கொண்டு வரும்படியும் கேட்டுக் கொண்டார். மேலும், புதிய திட்டப்பணிகள், ஏற்கெனவே உள்ள திட்டப் பணிகளுக்கு நிலுவையில் உள்ள நிதி ஆதாரங்கள் குறித்த தகவல்களை ஆட்சியர் மூலம் அறிக்கையாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டத்துக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், சார்-ஆட்சியர்கள் கே.மெஹராஜ்,  இளம்பகவத், திட்ட இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி) பெ.பெரியசாமி, (மகளிர் திட்டம்) சிவராமன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com