விலையில்லா பொருள்களை பள்ளிகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல்..!

மாணவர்களுக்கான விலையில்லா பொருள்களை பள்ளிகளுக்குக் கொண்டு சென்று சேர்ப்பதில் பல்வேறு சிக்கல்களை தலைமை ஆசிரியர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
விலையில்லா பொருள்களை பள்ளிகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல்..!



மாணவர்களுக்கான விலையில்லா பொருள்களை பள்ளிகளுக்குக் கொண்டு சென்று சேர்ப்பதில் பல்வேறு சிக்கல்களை தலைமை ஆசிரியர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் அரசின் உத்தரவையும் மீறி செயல்பட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சமச்சீர் கல்வி முறை அமல்படுத்திய பிறகு ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவம் தொடங்கும் போதும், பள்ளியின் தொடக்க நாளில் மாணவர்களுக்கு அந்த பருவத்துக்குரிய புத்தகம் மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படுகிறது. 
அதனால் முன்கூட்டியே அந்தந்த பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் புத்தகம் வழங்கப்படும் இடத்துக்குச் சென்று புத்தகங்களை வாங்கி வருவர். புத்தகம் மட்டுமல்லாது மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, செருப்பு, க்ரையான்ஸ், உலக நாடுகளின் வரைபடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தான் வாங்கிச் சென்று வந்தனர். அருகில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு, புத்தகங்கள் உள்ளிட்ட விலையில்லா பொருள்களை வாங்கிச் செல்வர். வாகன செலவை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே சொந்த செலவாக ஏற்க வேண்டியிருந்தது. 
தற்போது புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரடியாக அனுப்பி வைப்பதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளி வேளை நேரத்தில் புத்தகம் எடுத்து வர வேண்டியதில்லையெனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
அதேபோல புத்தகம் எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்கு குறிப்பிட்ட தொகையை அரசே ஒதுக்கியுள்ளது. இந்த செலவு பாடப் புத்தகங்களை எடுத்துச் சென்று சேர்ப்பதற்காக மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மற்ற விலையில்லா பொருள்களை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே சொந்த செலவில் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. 
எனினும் இந்த உத்தரவையும் மீறி தலைமை ஆசிரியர்களே வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்று, பள்ளிக்குத் தேவையான பாட புத்தகங்களை தற்போதும் தங்களுடைய சொந்த செலவில் தான் எடுத்து வரும் நிலை உள்ளது. 
சில பள்ளிகளுக்கு அரசாங்க செலவில் புத்தகங்கள் அனுப்பப்பட்டாலும், பள்ளி வேளை நேரத்தில் அவை அனுப்பப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. சில நேரங்களில் பள்ளி வேளை நேரம் முடிந்து இரவு 7 மணி, 8 மணி போன்று இரவு நேரங்களிலும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 
பெண்கள் தலைமை ஆசிரியர்களாக இருந்தால் இரவு நேரத்தில் புத்தகங்களை பெறுவதற்காக பள்ளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளி அமைந்துள்ள ஊரில் வசிக்கும் பெண் தலைமை ஆசிரியராக இருந்தால் தனது கணவருடன் அந்த இரவு நேரத்திலும் சென்று புத்தகங்களை பள்ளியில் இறக்கி வைக்க வேண்டியுள்ளது. 
தாமதமாக வந்த புத்தகப் பை : சில வட்டாரங்களைச் சேர்ந்த சில பள்ளிகளுக்கு கடந்த 2017-2018 கல்வியாண்டுக்கான விலையில்லா புத்தகப்பை தற்போது நடப்பாண்டில் தான் கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 5, 8-ஆம் வகுப்பு முடித்து வேறு பள்ளிக்குச் சென்ற மாணவர்களுக்கான புத்தகப்பைகளை சில தலைமை ஆசிரியர்கள் அப்படியே பள்ளியில் வைத்துள்ளனர். 
சிலர் முறைகேடாக அதனை வெளியில் விற்பனையும் செய்து விடக்கூடிய நிலையும் உள்ளது. புத்தகப் பைகளின் தரத்தை பரிசோதனை செய்து அனுப்பியதால் காலதாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் கூறியதாக பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 
வட்டார அளவிலான கிடங்குகளில் சில புத்தகங்களை ஒருமுறை வழங்குவது, விடுபட்ட சில புத்தகங்களை பிறகு மற்றொரு நாள் வழங்குவது, விலையில்லா பொருள்களை வேறொரு நாள் வழங்குவது என பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பலமுறை அலைக்கழிக்கப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு கூடுதலாக செலவாகிறது. 
பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கும் செலவை அரசே ஏற்றுக் கொண்டுள்ளதாக உத்தரவிட்டுள்ள போதிலும், அந்த செலவை பள்ளித் தலைமை ஆசிரியர்களே ஏற்று செய்ய வேண்டிய நிலையே தொடர்கிறது. 
பாடப் புத்தகங்கள், விலையில்லா பொருள்கள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் செலவுகளை அரசாங்கமே ஏற்பதுடன், தலைமை ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் அவற்றை எடுத்து வருவதற்காக கிடங்குகளுக்கு கட்டாயமாக செல்லக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com