விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகளை மத்திய அரசு உயர்த்த வேண்டும்: இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்

விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகளை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்  கேட்டுக் கொண்டார்.

விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகளை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்  கேட்டுக் கொண்டார்.
"ரிவேரா' எனும் சர்வதேச கலை, விளையாட்டு விழா வேலூர் விஐடியில் வியாழக்கிழமை தொடங்கியது. விஐடி திறந்தவெளி விளையாட்டு அரங்கில் விழாவைத் தொடங்கி வைத்து முரளி விஜய் பேசியது:
வாழ்க்கையில் உயர கல்வியும் விளையாட்டும் அவசியம். விளையாட்டு தன்னம்பிக்கையை உருவாக்கும். கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் வெற்றி பெற கூட்டு முயற்சி தேவை. ஒன்றாக இணைந்து செயல்படுவதன் மூலம் வெற்றி நிச்சயம். விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதில் அரசியல் தலையீடு என்பது இயல்பானதுதான். அவற்றையும் மீறி உயரத்துக்கு வரும் வகையில் வீரர்கள் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். வர உள்ள உலக கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலக கோப்பையை நிச்சயம் வெல்லும். மற்ற நாடுகளை ஒப்பிடாததே இந்திய அணியின் முக்கிய பலம். மற்ற நாடுகளைவிட இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். ஆனால் அந்நாடுகளில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் குறைவாக உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகளை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து 4 நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், உள்நாட்டிலிருந்தும், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள 25-க்கும்  மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 38 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
விழாவையொட்டி, நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் 4,400 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதை விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முரளி விஜய் பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், விஐடி செயல் இயக்குநர் சந்தியா பெண்ட்டரெட்டி, துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், மாணவர் நலன் இயக்குநர் அமித் மகேந்திரக்கர், "ரிவேரா' ஒருங்கிணைப்பாளர் எஸ். சசிகுமார், உடற்கல்வி இயக்குநர் தியாகசந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com