அரசுப் பள்ளி வகுப்பறையில் பள்ளி நேரத்தில் கணித ஆசிரியைக்கு வளைகாப்பு விழா

அரக்கோணம் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் பள்ளி அலுவல் நேரத்தில் ஆசிரியைக்கு வளைகாப்பு விழா நடைபெற்றதை பெற்றோர் மற்றும்

அரக்கோணம் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் பள்ளி அலுவல் நேரத்தில் ஆசிரியைக்கு வளைகாப்பு விழா நடைபெற்றதை பெற்றோர் மற்றும் மாணவிகள் வேடிக்கை பார்த்தனர். 
அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் இதே கிராமத்தில் இருந்த அரசினர் மேல்நிலைப் பள்ளியைப் பிரித்து இந்த மகளிர் மேல்நிலைப்பள்ளி தனியாகத் தொடங்கப்பட்டது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஜெயந்தி என்பவர் நியமிக்கப்பட்டு பள்ளி நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் இப்பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியை கருத்தரித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு வளைகாப்பு விழா நடத்த பள்ளியின் மற்ற ஆசிரியைகள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி அளவில் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் நடைபெற்றது. அங்கிருந்த மாணவிகளை வேறு அறைக்கு மாற்றிவிட்டு விழாவை நடத்தியுள்ளனர்.
 அந்த ஆசிரியையை ஒரு நாற்காலியில் மாலை அணிவித்து அமரவைத்து, தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமையில் மற்ற ஆசிரியைகள் அனைவரும் அவருக்கு நலங்கு வைத்துள்ளனர். தொடர்ந்து அனைவருக்கும் கலவை சாதம் பரிமாறப்பட்டு விருந்தும் நடைபெற்றுள்ளது.
இதை பள்ளியின் அனைத்து மாணவிகளும் அப்போது பள்ளிக்கு வந்த பெற்றோர்களும் வேடிக்கை பார்த்துள்ளனர். பள்ளியில் வளைகாப்பு விழா என்றதும் அக்கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்படும் சமுதாய வளைகாப்பு நிகழ்வு என நினைத்து கிராமத்தினர்அங்கு வந்தனர். எனினும், இது ஆசிரியைக்கான வளைகாப்பு என்பது அவர்களுக்கு பின்னரே தெரிய வந்தது. 
பள்ளி நேரத்தில், வகுப்பறையில் இருந்த மாணவிகளை வெளியேற்றி, தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியைகள் நடத்திய இவ்விழா கிராம மக்களை முகம்சுளிக்க வைத்தது. இது குறித்து அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரனிடம் கேட்டபோது இந்நிகழ்வு நடைபெற்றது எனக்குத் தெரியாது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com