போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறும் ஆற்காடு நகரம்

ஆற்காடு நகரில் நாளுக்கு நாள் தொடரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்


ஆற்காடு நகரில் நாளுக்கு நாள் தொடரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஆற்காடு நகரில் தற்போது போக்குவரத்து நெரிசல் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆற்காடு- கலவை செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், கருவூலம், புதிதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்றம் ஆகியவை அமைந்துள்ளன.
எனினும், இந்தச் சாலையில் பேருந்துப் போக்குவரத்து மட்டும் தடை செய்யப்பட்டு ஆற்காடு-செய்யாறு சாலையில் பேருந்துகள் சென்று வருகின்றன. 
கலவை சாலையில் பேருந்து போக்குவரத்து மட்டும் தடை செய்யப்பட்டாலும் மற்ற வாகனங்களான லாரி, வேன், சரக்கு வாகனங்கள், கார், ஆட்டோ, இருக்கர வாகனங்கள் செல்வதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதேபோல்   சென்னை, சோளிங்கர், திருத்தணி, சித்தூர், வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்  இருந்து ஆற்காடு வழியாக ஆரணி செல்லும்  வாகனங்கள் ஆற்காடு பாலாற்று மேம்பாலத்திலிருந்து தொடங்கி அண்ணாசாலை, தோப்புகானா பகுதியைக் கடக்கும் வரை  ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆரணி செல்ல ஒருவழிப்பாதை மட்டுமே உள்ளதால் நாள்தோறும் காய்கனி அங்காடிகள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாக   உள்ளது. அதேபோல் ஆரணி, திமிரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களால் ஆற்காடு ஜீவானந்தம் சாலை, தொல்காப்பியர் தெரு, அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுகிறது.
ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் செல்லும் வானங்கள் பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றாமல் எதிரே வேலூர் செல்லும் சாலையில் நின்று  பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
புறவழிச்சாலை அமைக்க வேண்டும் 
ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்ல புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை தொடர்கிறதே தவிர தொடங்கப்படவில்லை. இந்தப் புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில்  குறையும். 
 மாற்றுப் பாதையில் கனரக வாகனங்கள் 
ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தற்போது ஆரணியில் இருந்து வரும் அனைத்து கனரக வானங்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள், கார் உள்ளிட்டவற்றை தாஜ்புரா இணைப்புச் சாலையில் இருந்து கிருஷ்ணாபுரம், கண்ணமங்கலம் சாலை, வீட்டுவசதி வாரியப் பகுதி வழியாக வேலூர் சாலையில் சென்று மேல்விஷாரம் தனியார் கல்லூரி அருகே உள்ள  தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து ஆற்காடு நகர அனைத்து வணிகர் சங்கக் தலைவரும், நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவருமான ஜெ.திருநாவுக்கரசு கூறியது:
ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு முக்கிய காரணமே ஆரணி செல்லும் அனைத்து வாகனங்களும் ஆற்காடு நகருக்குள் வந்து செல்வதுதான்.
ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்ல புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. 
தாஜ்புரா-கிருஷ்ணாபுரம் சாலையை அகலப்படுத்தி விஷாரம் தனியார் கல்லூரி வழியாக பேருந்துகளைத் தவிர மற்ற வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்க வேண்டும். ஆட்டோக்களை ஒருவழிப் பதையில் மட்டுமே இயக்க வேண்டும். 
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் போக்குவரத்து காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com