பாலாற்றில் மணல் அள்ள அனுமதி: மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கோரிக்கை

வேலூர், காட்பாடி வட்டங்களுக்கு உட்பட்ட பாலாற்றுப் பகுதிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கக்

வேலூர், காட்பாடி வட்டங்களுக்கு உட்பட்ட பாலாற்றுப் பகுதிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கக் கோரி மாட்டு வண்டித் தொழிலாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. இதில், வேலூர் இரட்டை மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், "பாலாற்றில் இருந்து மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்களின் நலன்கருதி வேலூர், காட்பாடி வட்டத்துக்குஉட்பட்ட பாலாற்றுப் பகுதிகளில் மணல் குவாரி அமைத்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.
பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழக  விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், "ஆம்பூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு வட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்குரிய இழப்பீடுத் தொகை வழங்கப்படவில்லை. முறைப்படி நில அளவை செய்து தற்போதைய சந்தை நிலவரப்படி இழப்பீடு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். 
வேலூரை அடுத்த அரப்பாக்கம் அருகே உள்ள கோட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், "கோட்டக்கல் கிராமத்தில் 43 குடும்பத்தினர் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றோம். இந்தப் பகுதி மக்களுக்கு பட்டா வழங்குமாறு கோரி ஏற்கெனவே மனு அளித்திருந்தோம். அதன்படி, கிராமத்துக்கு வந்து அதிகாரிகள் ஆய்வு செய்து 7 குடும்பங்களுக்கு மட்டுமே பட்டா வழங்க முடிவு செய்துள்ளனர். மீதமுள்ள குடும்பங்களுக்கும் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
வாலாஜாபேட்டையை அடுத்த வாங்கூர் கிராம மக்கள் அளித்த மனுவில், "எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக, ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து போலீஸார் இருவரைக் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், சாராய விற்பனைக்கு எதிராக மனு அளித்த எங்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். எனவே, இந்தப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர். இதேபோல், உதவித்தொகை, இலவச பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 350-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் உள்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com