வாகனச் சோதனையில் கோட்டை விடப்படும் பேருந்துகள்!

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புப் பணியையொட்டி, பல்வேறு குழுக்கள் 24 மணிநேரமும் வாகனச் சேதனையில் ஈடுபட்டாலும், அந்தக்


வேலூர் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புப் பணியையொட்டி, பல்வேறு குழுக்கள் 24 மணிநேரமும் வாகனச் சேதனையில் ஈடுபட்டாலும், அந்தக் குழுவினர் பேருந்துகளைக் கண்டுகொள்வதில்லை என்றும், இதனால் பேருந்துகளில் பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவை கடத்திச் செல்லப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் நடத்தை விதிகளை அமல்படுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் 39 பறக்கும் படைக் குழுக்கள், 39 நிலைக் கண்காணிப்புக்  குழுக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் நடத்தும் தேர்தல் பிரசாரப் பணிகள் ஆகியவற்றை பதிவு செய்யும் வகையில் 26 காணொலிக் கண்காணிப்புக் குழுக்கள், அவ்வாறு பதிவு செய்யும் பதிவுகளைத் தணிக்கை செய்து செலவினப் பார்வையாளரிடம் சமர்ப்பிக்க 13 குழுக்கள், வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிக்க 13  உதவி செலவினப் பார்வையாளர் குழுக்கள், 13 உதவி கணக்குத் தணிக்கைக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
பறக்கும் படைக் குழுவினர், நிலைக் கண்காணிப்புக் குழுவினர், காணொலிக் கண்காணிப்புக் குழுவினர் ஆகியோர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தக் குழுவினர் தேர்தலில் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்கும் நோக்கில் கார், வேன்களை மட்டுமே சோதனையிட்டு வருகின்றனர். அப்போது பெரும்பாலும் தொழில் நிமித்தமாக பணம் கொண்டு செல்வோரே சோதனையில் சிக்குகின்றனர். 
அதேசமயம், சென்னையில் இருந்தும், பெங்களூரில் இருந்தும், இன்னும் பல இடங்களில் இருந்தும் வேலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்தச் சோதனையில் இருந்து தப்பி விடுகின்றன. 
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது இதேபோல் அரசு, தனியார் பேருந்துகள் சோதனையில் இருந்து தப்பிய நிலையில், ஒரு சில அரசியல் கட்சிகள் நம்பகமான நபர்களிடம் தோளில் மாட்டிச்செல்லும் பைகளில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கொடுத்தனுப்பிய சம்பவங்களும் நடந்திருப்பதாக பெயர் கூற விரும்பாத அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். 
இதேபோல், சென்னையில் இருந்து ஒசூர் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த ஒருவரிடம் இது பற்றிக் கேட்டபோது, வழியில் எந்த இடத்திலும் தேர்தல் பறக்கும்படைக் குழுவினர் சோதனை நடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். 
இதுகுறித்து அலுவலர்களிடம் கேட்டபோது, பேருந்துகளில் சோதனை நடத்தக் கூடாது என்று எந்தவித விதிமுறையும் இல்லை. 
கார், வேன்கள் மட்டுமின்றி அவ்வப்போது பேருந்துகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. தேர்தல் நெருங்கும்போது இந்தச் சோதனை இன்னும் தீவிரப்படுத்தப்படும்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com