நந்தீஷ்-சுவாதி கொலையை ஆணவக் கொலையாக அரசு அறிவிக்க வேண்டும்: திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்

நந்தீஷ்-சுவாதி கொலையை ஆணவக் கொலையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தினார். 

நந்தீஷ்-சுவாதி கொலையை ஆணவக் கொலையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தினார். 
ஒசூர் அருகே ஆணவக் கொலை செய்யப்பட்ட நந்தீஷின் கிராமமான சூடுகொண்டபள்ளிக்கு வந்த ஒசூர் கோட்டாட்சியர் விமல்ராஜிடம் கோரிக்கை விடுத்த  இயக்குநர் பா.ரஞ்சித், நந்தீஷ்- சுவாதி கொடூரக் கொலையை, ஆணவக் கொலை என்று தமிழக அரசு  உடனடியாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். 
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு உடனடியாக தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். இல்லையெனில் போராட்டம் தீவிரமாகும் என்றார். இதைத் தொடர்ந்து, கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோட்டாட்சியர் விமல்ராஜிடம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சாமுவேல்ராஜ், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் தலைமையில் மனு வழங்கப்பட்டது. 
முன்னதாக, ஜெய்பீம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் ஒசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நந்தீஷ் ஆணவக் கொலைக்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒசூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஒசூர் டி.எஸ்.பி. மீனாட்சி, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி.சங்கர் ஆகியோர் மேற்பார்வையில், ஆய்வாளர்கள் பெரியசாமி(அட்கோ), முருகன்(சூளகிரி) தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். 
இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ஒசூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com