மின் வேலியில் சிக்கி 2 விவசாயிகள் பலி

அஞ்செட்டி அருகே காட்டுப் பன்றிக்கு வைத்த மின் வேலியில் சிக்கி 2 விவசாயிகள் உயிரிழந்தனர். 

அஞ்செட்டி அருகே காட்டுப் பன்றிக்கு வைத்த மின் வேலியில் சிக்கி 2 விவசாயிகள் உயிரிழந்தனர். 
கிருஷ்ணகிரி மாவட்டம்,  தேன்கனிக்கோட்டை வட்டம்,  அஞ்செட்டி அருகே உள்ள நாட்ராம்பாளையம் ஊராட்சி பஞ்சளதோனை கிராமத்தைச் சேர்ந்தவர் சித்த மல்லப்பா (62), விவசாயி.  இவர் தனது நிலத்தில் ராகி,  நிலக்கடலை பயிரிட்டுள்ளார்.  வனப்பகுதியையொட்டி இவரது நிலம் உள்ளதால், இரவு நேரங்களில் அடிக்கடி காட்டுப் பன்றிகள் வயலுக்குள் வந்து  பயிர்களை சேதம் செய்து வந்தன. தற்போது நிலக்கடலை அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில்,  காட்டுப் பன்றிகள் வராமல் தடுக்க சித்த மல்லப்பா நிலத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார்.
இந்த நிலையில்,  அருகில் உள்ள என்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான சின்ன முனியப்பா மகன் சிவனப்பா (30),  அதே கிராமத்தைச் சேர்ந்த பெரிய முனியப்பா மகன் கெம்பன் (45) ஆகியோர் தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனராம்.  வியாழக்கிழமை மாலை வரை மாடுகள் திரும்பாததால்,  சிவனப்பா, கெம்பன் ஆகிய இருவரும் மாடுகளைத் தேடிக் கொண்டு சித்த மல்லப்பாவின் விவசாய நிலம் அருகே சென்றனர்.  அப்போது அங்கிருந்த மின்வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.  இதில் சிவனப்பா, கெம்பன் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
இந்த நிலையில்,  மாடுகளைத் தேடி சென்ற சிவனப்பா, கெம்பன் ஆகிய 2 பேரும் வீடு திரும்பாததால்,  அவரது உறவினர்கள் வெள்ளிக்கிழமை காலை தேடினர்.  அப்போது, சித்த மல்லப்பாவின் விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து இருவரும் இறந்து கிடந்ததைக் கண்ட  உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். 
தகவலின் பேரில்,  தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கர், அஞ்செட்டி காவல் ஆய்வாளர் லட்சுமணன், உதவி காவல் ஆய்வாளர் பவுன்ராஜ் மற்றும் போலீஸார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.  இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீஸார்,  சித்த மல்லப்பாவைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com