ஒசூர் மாநகராட்சியாக அறிவிப்பு: அனைத்து தரப்பினரும் வரவேற்பு

தமிழக அரசு மாநகராட்சியாக ஒசூரை அறிவித்துள்ளதை அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.

தமிழக அரசு மாநகராட்சியாக ஒசூரை அறிவித்துள்ளதை அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.
மேலும், மாநகராட்சிக்கு இணையான வரி தற்போதே வசூலிக்கப்பட்டு வருவதால்,  மீண்டும் வீட்டு வரி, தொழில் வரியை உயர்த்தக் கூடாது என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒசூர் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி சட்ட முன்வடிவை தமிழக சட்டப் பேரவையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை அறிவித்தார்.  இதை ஒசூரில் உள்ள அரசியல் பிரமுகர்கள், தொழில் துறையினர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.
ஒய்.பிரகாஷ் ( தளி எம்எல்ஏ): ஒசூர் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்துள்ளதை வரவேற்கின்றோம்.  தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3 போகம் விவசாயம் செய்து வருகின்றனர். அந்தக் கிராமத்தை நீக்கிவிட்டு,  ஒசூரை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.  அந்தப் பகுதியைத் தவிர்க்க வேண்டும்.
பி. முருகன். (வேப்பனஅள்ளி எம்எல்ஏ): ஒசூர் மாநகராட்சியாக  அறிவித்ததோடு, இது தேர்தலுக்கான அறிவிப்பாக நின்றுவிடக் கூடாது.  உடனடியாக நிதியை ஒதுக்கீடு செய்து தேவையான அதிகாரிகளை நியமித்து செயல்படுத்த வேண்டும்.  தொரப்பள்ளி கிராமத்தை மாநகராட்சியுடன் இணைத்தால் 3 போகம் பயிர் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை பெருமளவில் பாதிக்கும்.
கே.ஏ. மனோகரன் (முன்னாள் காங். எம்.எல்.ஏ.) ஒசூர் நகராட்சியாக இருந்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது சூசூவாடி,  மூக்கண்டப்பள்ளி, ஆவளப்பள்ளி ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டன.
ஆனால், அந்தப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.  மேலும்,  தற்போது கூடுதல் ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக அறிவித்தால் மட்டும் போதாது.  அதற்குத் தேவையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உடனடியாக நியமித்து, கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
ஞானசேகரன்( தமிழ்நாடு சிறு குறுந்தொழில் சங்க இணைச் செயலாளர்): ஒசூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.  ஆனால், ஏற்கெனவே அதிக வரியை நகராட்சி வசூலித்து வருவதால்,  வீட்டு வரி, தொழில் வரியை உயர்த்தக் கூடாது. பெங்களூரில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு 50 சதவீத நிதி அளித்தால் ஒசூரையும் இணைத்து இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த சம்மதிப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
இத் திட்டத்தை மாநில அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.  இதனால், இரட்டை நகரங்களாக ஒசூர், பெங்களூரு உருமாறும் என்றார்.
வேல்முருகன் (ஹோஸ்டியா):  ஒசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை வரவேற்பதாக ஹோஸ்டியா சங்கம் தெரிவித்தது.  தொழிலாளர்களின் நலனை முன்னிட்டு ஷேர் ஆட்டோ இயக்க வேண்டும்.
துரை (அனைத்து குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர்): வீட்டு வரியை உயர்த்தாமல் அடிப்படை கட்டமைப்புகளைச் செயல்படுத்த வேண்டும்.  அனைத்து வார்டுகளுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை முழுமையாக அளிக்க வேண்டும். சேலத்தைப் போன்று பல இடங்களில்  மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.  நகராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஊழியர்கள்,  அதிகாரிகள், பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
ஒசூர் சிறப்பு நிலை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என ஒசூர் நகராட்சி ஆணையாளர் கே. பாலசுப்பிரமணியன்
தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:  ஒசூர் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கட்செவி அஞ்சல் மூலம் தகவல்கள், கருத்துகள், புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். தேவையில்லாத புகார்களைப் பதிவு செய்வோரைக் கண்காணித்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.  புகார் தெரிவிக்க வேண்டிய எண். 94899-09828.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com