பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஐநூறு ரூபாய் நோட்டுகளை எரித்தோம்: ரயில் கொள்ளையர் வாக்குமூலம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், தாங்கள் கொள்ளையடித்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை தீவைத்து எரித்ததாக ரயில் கொள்ளையர் வாக்குமூலம்


பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், தாங்கள் கொள்ளையடித்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை தீவைத்து எரித்ததாக ரயில் கொள்ளையர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சேலத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு 2016, ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு, 4 பெட்டிகளிலிருந்த ரூ. 5.78 கோடியை கொள்ளையடித்த வழக்கில், சிபிசிஐடி போலீஸார், மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லத்தைச் சேர்ந்த ப. தினேஷ், ரோ.ரோஹன் பார்தி ஆகிய இருவரை கடந்த செப்டம்பரில் கைது செய்தனர்.
மேலும், வழக்கில் தொடர்புடைய மத்தியப் பிரதேசம் குணா மத்திய சிறையிலும், அசோக் நகர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக் கும்பல் தலைவர் எச்.மோகர் சிங், பி.ருசி பார்தி, ச.கலியா என்ற கிருஷ்ணா, மகேஷ் பார்தி, ந.பிராஜ்கமோகன் ஆகியோரை சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 30ஆம் தேதி கைது செய்தனர். இவர்கள் 5 பேரிடமும் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 14 நாள்களாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள்: மோகர்சிங்குக்கு கிரன், சங்காராம், ரசி, மகேஷ், பாசு, ஆமீன், தாராம் என 7 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா, குஜராத், மகாராஷ்டிரம் மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். ஆதாய கொலையிலும் ஈடுபட்டுள்ளனர். இக்கும்பலுக்கு ஒருகாலத்தில் தலைவராக இருந்த கிரேனை போலீஸார் என்கவுன்ட்டர் மூலம் 2012இல் கொலை செய்துள்ளனர். பின்னர் பல்வேறு கொள்ளை வழக்குகளில் மோகர்சிங் சகோதரர்கள் சிறைக்குச் சென்றனர். இதற்கிடையே, போலீஸாருக்கு தங்களை பற்றிய தகவல்களை அளித்ததாக மோகர்சிங், இருவரைக் கொன்றுவிட்டு தலைமறைவானார். போலீஸில் பிடிபடாமலிருக்க அவர் ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் குடும்பத்துடன் நாடோடியாக வசித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு தமிழகம் வந்த மோகர்சிங் விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், புதுச்சேரி, அரக்கோணம் பகுதிகளில் ரயில் நிலையங்கள், தண்டவாளம் ஆகியவற்றின் ஓரமாக வசித்து வந்தார். அப்போது சேலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதை நோட்டமிடத் தொடங்கினார். இதற்காக சேலம் -சென்னை இடையே பலமுறை ரயிலில் பயணம் செய்த அவர், சின்னசேலம் - விருத்தாசலம் இடையே 45 நிமிஷம் ரயில் மிகவும் மெதுவாக செல்வதை நோட்டமிட்டு, அங்கு தனது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.
பேட்டரி கட்டர்: அதன்படி, சம்பவத்தன்று சின்னசேலத்தில் ரயில் நின்றபோது மோகர்சிங் தரப்பினர் என்ஜின் பகுதி வழியாக ஏறி, சரக்குப் பெட்டிக்குள் சென்று, பேட்டரி கட்டர் மூலம் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே நுழைந்து, பணத்தை 6 லுங்கிகளில் மூட்டையாகக் கட்டி வெளியே எடுத்து வந்துள்ளனர்.
ரயில், விருத்தாசலம் அருகே வயலூர் பகுதியில் சென்றபோது அந்த 6 மூட்டைகளை ரயிலிலிருந்து கீழே வீசியுள்ளனர். அங்கு தயாராக இருந்த மற்றொரு கும்பல், பணமூட்டைகளை தூக்கிக்கொண்டு தப்பியோடியுள்ளது. இதன்பின்னர் மோகர்சிங், சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அதே ஆண்டு நவம்பரில் மத்திய அரசு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ததால், மோகர்சிங் ஐநூறு ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், அந்த நோட்டுக்களை தீயிலிட்டு எரித்துள்ளார். இத்தகவல்களை மோகர்சிங்கும், அவரது கூட்டாளிகளும் தங்களது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
சிறையில் அடைப்பு: இதற்கிடையே, 14 நாள்கள் போலீஸ் காவல் முடிந்து, சைதாப்பேட்டை 11 -ஆவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் அவர்கள் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, இம்மாதம் 26வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித் துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் புழல் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காண அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டு சிபிசிஐடி அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com