செப்.25 அதிமுக பொதுக் கூட்டத்துக்கு மேடை அமைக்க பூமி பூஜை

சேலம் கோட்டை மைதானத்தில் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் அதிமுக கண்டன பொதுக் கூட்டத்திற்கு

சேலம் கோட்டை மைதானத்தில் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் அதிமுக கண்டன பொதுக் கூட்டத்திற்கு மேடை அமைக்க வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும் என முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தார்.
இதையடுத்து சேலம் கோட்டை மைதானத்தில் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
இதனிடையே, சேலம் கோட்டையில் அதிமுக கண்டன பொதுக் கூட்டத்துக்கு மேடை அமைக்க பூமி பூஜை  நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகர மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தினார்.
இதில்  எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ. ஏ.பி.சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜு,  எம்.நடேசன், முன்னாள் மேயர் எஸ்.சௌண்டப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேலம் கண்டன பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, செப்டம்பர் 25 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானத்தில் வருகிறார். பின்னர் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் கூட்டம் முடிந்ததும் காரில் கோவை சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com