சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ விழா

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு


சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷத்தையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சனிப் பிரதோஷம் என்பதால் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.
வாழப்பாடியில்... வாழப்பாடி அருகே பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோயிலில் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில், நந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகளுடன், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தீஸ்வரர் விபூதி அலங்காரத்திலும், மூலவர் தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தனி அம்பாள் பக்தர்களுக்கு புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோயில் நடைபெற்ற சனிப் பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்பாளுக்கு, பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர் கோயில், வேப்பிலைப்பட்டி, விலாரிபாளையம் மோட்டூர், கல்யாணகிரி தேன்மலை சிவன் கோயில்களிலும், சனிப் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூரில்... ஆத்தூரில் வசிஷ்ட நதிக்கரையோரம் அமைந்துள்ள கைலாசநாதர் திருக்கோயிலில் சனிப் பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சனிக்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நந்தியபெருமான் மீது சுவாமி திருக்கோயிலை வலம் வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தம்மம்பட்டியில்... தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோயிலில் சனிப் பிரதோஷ விழாவையொட்டி நந்தீஸ்வரருக்கு 108 லிட்டர் பால், 30 லிட்டர் தயிர் மற்றும் மஞ்சள்தூள், குங்குமம் , அரிசி மாவு, சந்தனம், திருமஞ்சனம், எலுமிச்சைச் சாறு, பஞ்சாமிர்தம், இளநீர், தேன், நல்லெண்ணெய் திருநீறு, சீயக்காய்த்தூள் ஆகிய பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, அருகம்புல் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடினர். சுவாமிக்கு வில்வம், அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் செந்தாரப்பட்டியில் ஸ்ரீ செந்தாழை புரிஸ்வரர் கோயில், கெங்கவல்லி, வீரகனூர் சிவன் கோயில்களிலும் சனிப் பிரதோஷ விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com