கருமந்துறை அருகே சாலை விபத்தில் விவசாயி பலி: பேருந்துக்கு தீ வைப்பு

வாழப்பாடியை அடுத்த கருமந்துறை அருகே தனியார் பேருந்து மோதியதில் விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

வாழப்பாடியை அடுத்த கருமந்துறை அருகே தனியார் பேருந்து மோதியதில் விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால், ஆவேசமடைந்த அப் பகுதி மக்கள் பேருந்தை தீவைத்துக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.  மேலும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறையை அடுத்த கோவில்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி இளையராஜா (35).  இவர், கருமந்துறைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு கோவில்காடு கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பிக் கொண்டிருந்தார். 
பகுடுப்பட்டு பிரிவுச் சாலை அருகே சென்றபோது சேலத்திலிருந்து கருமந்துறை நோக்கி வந்த தனியார் பேருந்து இளையராஜா மீது மோதியதில், உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பேருந்து எரிப்பு... தகவலறிந்த அவரது உறவினர்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   அப்போது விபத்துக்குக் காரணமான தனியார் பேருந்தை தீவைத்துக் கொளுத்தினர்.  இதில் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இச் சம்பவத்தால் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்க முயன்றனர்.  அப்போது பொதுமக்கள் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த இளையராஜா குடும்பத்துக்கு நிலப் பட்டா வழங்கிட வேண்டும்,  குழந்தைகளின் படிப்புச் செலவை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸாரும்,  பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அன்புக்கரசி தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகளும் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.  அதையடுத்து போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்து ஓட்டுநரான கல்வராயன் மலை கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாஜலத்தை (32) போலீஸார் கைது செய்தனர்.
தகவல் அறிந்ததும் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினார்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 200- க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். 
அதேநேரத்தில் தனியார் பேருந்தைக் கொளுத்தியவர்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இறந்த விவசாயிக்கு தனக்கோடி(30) என்ற மனைவியும்,  விக்னேஷ் (14) என்ற மகனும்,  இந்துஜா (13) என்ற மகளும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com