பயோ பிளாஸ்டிக் மரவள்ளி பயிரிடும் விவசாயிகளுக்கு சாதகமாக மாறுமா?

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை ஜனவரி 1 ஆம் தேதி

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து பயோ பிளாஸ்டிக் பை தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் உற்பத்தி செய்யும் ஆலைகளை நிறுவ வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மரவள்ளி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருள்களுக்கான உறைகள் தவிர,  தடிமன் வேறுபாடின்றி, இதர மக்காத பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர், தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.  இந்த தடையைத் தொடர்ந்து தமிழகத்தில் பரவலாக பிளாஸ்டிக் பயன்பாடு அநேக இடங்களில் குறைந்துவிட்டது. 
    இத்துடன், பிளாஸ்டிக் பை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வேலையாள்களும் ஊதியமின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  
     அதேநேரத்தில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பயோ பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பது என்பதும் குதிரைக்கொம்பாக இருக்கிறது.  மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம்,  சோயா ஆகியவற்றில் இருந்து பயோ பிளாஸ்டிக் பைகள்  தயாரிக்கப்படுகின்றன. 
  காய்கறிகள், இயற்கைக் கழிவுகளை கொண்டு பயோ பிளாஸ்டிக் தயாரிப்பதால், இதை குழந்தைகளோ அல்லது விலங்குகளோ சாப்பிட்டால்,  உடலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.  இதற்கான தொழில்நுட்பம் வெளிநாடுகளில் இருப்பதால்,  உடனே கொண்டு வந்து உற்பத்தியைப் பெருக்குவதில் கால தாமதம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது எனத் தெரிவிக்கிறார் சேலம் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஷ்.   
 தமிழகத்தைத் தவிர்த்து பிற மாநிலங்களில் உள்ளதுபோல 51 மைக்ரான் அளவுக்கு பிளாஸ்டிக் பைகளைத் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல, பயோ பிளாஸ்டிக் பைகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களைப் பெற்று, அதை உற்பத்தி செய்வதிலும் தற்போது கால தாமதம் நிலவுகிறது.  வரும் நாள்களில் தான் பயோ பிளாஸ்டிக் தொழில்நுட்பமும்,  மூலப்பொருள்களைப் பெற்று இதில் பயோ பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்க முடியும் என்கிறார் சேலம் மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் தருண். 
     பயோ பிளாஸ்டிக் உற்பத்தியானது, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர்களில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக,  சேலம் மாவட்ட மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கோவிந்தராஜன் கூறியது:   தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது.  உணவுத் தேவைக்கு கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல, ஜவ்வரிசி தயாரித்து, வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சேலத்து ஜவ்வரிசிக்கு வட மாநிலங்களில் நல்ல கிராக்கி உள்ளது. 
மரவள்ளிக்கிழங்கில் இருந்து சேகோ (ஜவ்வரிசி) தயாரிக்கும் ஆலைகள் சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இயங்கி வருகின்றன. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது.  இதுதவிர,  நாமக்கல் உள்ளிட்ட இதர மாவட்டங்கள் சேர்த்து பல லட்சம் ஏக்கர்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே ஜவ்வரிசி ஆலைகளில் ரசாயனப் பொருள்கள், அமிலங்கள்,  மக்காச்சோளம் கலப்படம் செய்து ஜவ்வரிசி உற்பத்தி செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில், கலப்படப் புகார் எதிரொலி காரணமாக விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 கிடைத்து வந்த நிலையில்,   தற்போது மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.3,500 முதல் ரூ.4,000 என்ற குறைந்த விலை கிடைத்து வருகிறது. 
    குறைந்த முதலீட்டில்,  அதிக லாபம் கிடைப்பதால், ஆலை உரிமையாளர்களும், வியாபாரிகளும் மக்காச்சோள  மாவினைக் கலப்படம் செய்து சந்தையில் விற்பனை செய்வதால், மரவள்ளிக்கிழங்கு தரம் குறைந்து, அதை உணவுப் பொருளாகப் பயன்படுத்தும் நுகர்வோரும் குறைந்து வருகின்றனர்.  ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை அரசு தடுத்திட வேண்டும். அதேவேளையில்,  தமிழக அரசு பிளாஸ்டிக் பொருள்கள் மீது தடை விதிக்கப்பட்ட நிலையில், பயோ பிளாஸ்டிக் பைகள் மீது கவனம் திரும்பியுள்ளது. ஏற்கெனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து பயோ பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டன.  இது பிளாஸ்டிக் மற்றும பாலிதீன் பைகளை விட மூன்று மடங்கு விலை அதிகமாகும்.  அப்போதைய நிலையில் யாரும் பயோ பிளாஸ்டிக் பக்கம் செல்லவில்லை.  தற்போது பிளாஸ்டிக் மீதான தடை வந்துவிட்ட நிலையில்,  மரவள்ளிக் கிழங்கில் இருந்து பயோ பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு குறித்து விழிப்புணர்வு வந்துள்ளது.   மரவள்ளிக் கிழங்கில் இருந்து மாட்டு தீவனம் மற்றும் பயோ எத்தனால் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்க முடியும்.  அந்தவகையில் பயோ பிளாஸ்டிக் பொருள்களையும், மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்க முடியும் என்றார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி கூறியது: பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடையைத் தொடர்ந்து பயோ பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு குறித்து ஆர்வம் எழுந்துள்ளது.  ஏற்கெனேவே இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மரவள்ளிக்கிழங்கு மாவைப் பெற்று அதில் இருந்து மூலப்பொருள்களை தயாரித்து, ஜெர்மனி பயோ பிளாஸ்டிக் பைகளைத் தயாரித்து வருகிறது. ஆனால்,  பயோ பிளாஸ்டிக் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களை ஜெர்மனியில் இருந்து விலை கொடுத்து இறக்குமதி செய்து,  உற்பத்தி செய்வதால் பல மடங்கு செலவாகும்.  மேலும்,  மூன்று மடங்கு விலை கூடுதலாக இருக்கும். சேலம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்படும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து பயோ பிளாஸ்டிக் மூலப்பொருள்களைத் தயாரிக்க அரசு ஊக்குவிக்க வேண்டும். ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வந்து மூடப்பட்ட நூற்றுக்கணக்கான ஜவ்வரிசி ஆலைகள், பயோ பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தயாரிக்கும் ஆலைகளாக மாற்றப்பட வேண்டும்.   சேலம் மாவட்டத்தில் பயோ பிளாஸ்டிக் மூலப்பொருள்களைத் தயாரிக்கும் போது மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல வருமானமும், பொருளாதாரமும் மேம்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com