சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: நாளை தீர்ப்பு

வாழப்பாடி அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கின் தீர்ப்பு மார்ச் 21-ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கின் தீர்ப்பு மார்ச் 21-ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளியான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 
கடந்த 2014 பிப். 14-ஆம் தேதி இரவு பரமசிவத்தின் 10 வயது மகள் தனது சகோதரிகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது பெற்றோர் அருகில் உள்ள தறிக்கூடத்தில் நெசவு நெய்து கொண்டிருந்தனராம்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பூபதி, ஆனந்த்பாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் மது போதையில், கதவு இல்லாத வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பரமசிவத்தின் 10 வயது மகளை அருகிலுள்ள பெருமாள் கோயில் மலைக்கு தூக்கிச்சென்று கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இச்சம்பவத்தில் இறந்து போன சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி காவல் துறையினர், சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்த பூபதி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
இச்சம்பவத்துக்குப் பிறகு சிறுமியின் பெற்றோர் அந்த ஊரை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் வேறு ஊருக்குச் சென்றுவிட்டனர். கைதான 5 பேர்  மீதும் கூட்டு வன்புணர்வு, கொலை மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், இருதரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், மார்ச் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பூபதி உள்பட 5 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 
குற்றம் உறுதி: அப்போது 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்த வழக்கின் தீர்ப்பு வரும் மார்ச் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்படுவதாகவும் மகிளா நீதிமன்ற  நீதிபதி விஐயகுமாரி தெரிவித்தார்.
இதனிடையே கொடுங்குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் முறையிட்டுள்ளோம் என அரசு தரப்பு வழக்குரைஞர் தனசேகரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com