உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல், தர்காக்களில் பணிபுரிவோர் உலமாக்கள் நலவாரியத்தில் இணைந்து

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல், தர்காக்களில் பணிபுரிவோர் உலமாக்கள் நலவாரியத்தில் இணைந்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நலவாரியத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், முஸ்லிம் ஆதரவற்றோர் இல்லங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் உறுப்பினர்களாகச் சேரலாம். 18 முதல் 60 வயதுக்கு உள்பட்டோர் இதில் பதிவு செய்து கொள்ளலாம். 
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை பெற்ற தேதியிலிருந்து விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ், உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெறலாம். உறுப்பினர் பதிவுக்குரிய விண்ணப்பங்களை மதுரையில் உள்ள வக்ஃபு கண்காணிப்பாளர் அல்லது திண்டுக்கல் ஈத்துகா மஹால் வளாகத்தில் உள்ள வக்ஃபு ஆய்வாளர் மூலமாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 ஏற்கனவே, பதிவுபெற்ற உறுப்பினர்கள் உலமாக்கள் நல வாரியத்தின் அட்டையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com